

ஆந்திர மாநிலத்தில் 900 ஹெக்டேர் பரப்பளவில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சித்தூர், கடப்பா, பிரகாசம், கிருஷ்ணா, கர்னூல், அனந்தபூர் ஆகிய 6 மாவட்டங்களில் தங்கச் சுரங் கங்கள் இருப்பது கண்டறியப் பட்டது. இதுகுறித்து பல ஆண்டு களாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. சித்தூர் மாவட்டத்தில் சாதுகொண்டா, தம்பளபல்லி பகுதிகளில் தங்கம் மட்டுமல்லாது, இரும்பு, வெள்ளி, செம்பு, ஈயம் உள்ளிட்டவற்றின் தாதுப் பொருட்களும் உள்ளது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, கடப்பா மாவட்டத் தில் உள்ள தெல்லகொண்டா, அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஜொன்ன கிரி ஆகிய இரு கிராமங்களிலும் ஆண்டுக்கு சுமார் 70 டன் அளவு தங்கக் கனிமத்தை வெட்டி எடுக்கலாம். இதேபோல கர்னூல் மாவட்டம், பனகான பல்லி, பகதாரை, எர்ரகுடி மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜக்கைய்யாபேட்டை ஆகிய பகுதி களிலும் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர அரசின் கனிம வளத்துறை தகவலின்படி, சித்தூர், நெல்லூர், கடப்பா, கர்னூல், பிரகாசம், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் பூமிக்கடியில் சுமார் 168 கி.மீ. வரை தங்கக் கனிமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் ஒரு டன்னுக்கு 3 முதல் 5 கிராம் வரை தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி ஆந்திராவில் 62,000 கிலோ தங்கம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தங்க தாது வைத் தோண்டி எடுக்க மத்திய வனத்துறை கடந்த 5-ம் தேதி அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ஜியோமைசூர் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இதற்கான பணிகளை தொடங்க உள்ளது.