நேருவின் பணிகளை இருட்டடிப்பு செய்கின்றனர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாக்கு

நேருவின் பணிகளை இருட்டடிப்பு செய்கின்றனர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாக்கு
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் நேருவின் வாழ்க்கை மற்றும் அவரின் பணிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் மதச்சார்பின்மையை கடைப்பிடிப்பது மிகவும் அவசிய மானது என்றும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்த தின விழாவையொட்டி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்று தொடங்கியது.

இக்கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசிய தாவது:

நாட்டின் முதல் பிரதமரான நேரு, மதச்சார்பின்மையில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந் தார். இந்தியாவையும் மதச்சார் பின்மையையும் பிரித்துப் பார்க்க முடியாது. இதுபோன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் மதச்சார் பின்மையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமானதாகும்.

மதச்சார்பின்மைக்கு ஆபத்து நேருமானால், அதை பாதுகாக்க எனது வாழ்வின் இறுதி வரை போராடுவேன் என்று நேரு கூறியுள்ளார்.

நேருவின் வாழ்க்கை மற்றும் அவரின் பணிகள் இப்போது இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. மேலும், அது தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன; திரித்துக் கூறப்படுகின்றன.

நவீன இந்தியாவை கட்டமைப் பதில் நேரு முக்கிய பங்காற்றினார். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக மட்டுமின்றி, பலமான பொதுத்துறையை கட்டமைப் பதற்கும் அவர் பாடுபட்டார். அவரின் பணிகளால் விளைந்த பலன் களைத்தான் இப்போது நாம் அனுபவித்து வருகிறோம்.

பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியா ஒற்றுமை யாக இருப்பதற்கு நாடாளுமன்ற ஜனநாயகமும், மதச்சார்பற்றத் தன்மையும்தான் சரியான கொள்கைகள் என்ற நேருவின் கருத்து இப்போது நிரூபண மாகியுள்ளது. இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

இந்த மாநாட்டில் திரிணமூல் கட்சித் தலைவர் மம்தா, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகவுடா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் பொதுச் செயலாளர் டி.பி.திரிபாதி, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய், கானாவின் முன்னாள் அதிபர் ஜான் குபார், நேபாளத்தின் முன்னாள் பிரதமர் மாதவ் கே.நேபாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக, தெலுங்கு தேசம் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதிலும், அக்கட்சி களின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in