

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவோம் என சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ் வாதி ஜனதா ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
இக்கூட்டணியில் காங் கிரஸ் இடம்பெறவில்லை. இடது சாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், தனது வீட்டில் 5 கட்சிகளின் தலைவர்களுக்கு நேற்று மதிய விருந்து அளித்தார்.
இதில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் சரத் யாதவ், நிதீஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மதச் சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி. தேவே கவுடா, இந்திய தேசிய லோக் தளம் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, சமாஜ்வாதி ஜனதா தலைவர் கமல் மொரார்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருந்துக்கு முலாயம் சிங் ஏற்பாடு செய்திருந்த போதும், ஊட கங்களை நிதீஷ்குமார் சந்தித்தார். அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில், மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து இந்த ஐந்து கட்சிகளும் ஒரே குரலில் பேச முடிவு செய்துள்ளோம்.
இம்முயற்சியைத் தொடங்கியதற்காக முலாயம் சிங் யாதவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜனதா பரிவார் என இக்கூட்டமைப்பு அழைக்கப்படும். ஒற்றுமையாக இணைந்து இக்கட்சி கள் செயல்படும்.
எதிர்காலத்தில் இக்கட்சிகள் தேர்தல் கூட்டணியாகச் செயல் படும் என்பதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதிற்கில்லை. இதற்கான விடை வருங்காலத்தில் தெரியும். ஒரே கட்சியாகச் செயல் படுவதற்கான வாய்ப்புகளை நோக்கி நகர்வோம். இக்கூட்டணி யில் காங்கிரஸ் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. இடதுசாரி களைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பாக எங்களின் கோணத்தைப் பகிர்ந்து கொள்ளும் கட்சிகளுடன் தொடர்பு கொள்வோம். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கி றோம்.
இக்குழுவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி யின் பங்களிப்பு குறித்தும் ஆலோ சிக்கப்பட்டது. ஆனால், இதுவரை முடிவு எட்டப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்குழுவில் அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தளம் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. ஜனதா குடும்பத்தில் அக்கட்சியும் முன்பு இணைந்திருந்தது குறிப்பிடத் தக்கது.
பாஜகவுக்கு கண்டனம்
நிதீஷ் குமார் மேலும் கூறிய தாவது: கட்சிகளிடையே முழு ஒற்றுமை ஏற்பட மீண்டும் ஒரு கூட்டம் விரைவில் நடத்தப்படும். வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தில் ஒரு காசைக் கூட திரும்பக் கொண்டு வராமல் விடமாட்டோம் எனக் கூறிய பாஜக, தற்போது குட்டிக்கரணம் அடித்துள்ளது. கருப்புப் பணம் மீட்கப்பட்டால் ஒவ்வொரு இந்தியருக்கும் தலா ரூ. 15 லட்சம் கிடைக்கும் எனச் சொன்னார்கள். இன்று, வெளிநாட்டில் எவ்வளவு கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்ற துல்லியமான கணக்கு தெரிய வில்லை என்று கூறுகிறார்கள்.
விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டுள்ளோம். இரு அவைக ளிலும் நிலம் கையகப்படுத்துதல் சட்டம், காப்பீடு மசோதா ஆகியவை குறித்து ஒருமித்த குரலில் எழுப்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.