

வீட்டுக்கு முன்பு பசு மாடுகளைக் கட்டி வைத்ததாக, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் 5 பேர் மீது பாஜக பிரமுகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மத்தியில் பாஜக பொறுப்பேற்ற பிறகு பசுக்களைப் பாதுகாப்பது தொடர்பாக அக்கட்சித் தலைவர் கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். உ.பி.யில் பசு கடத்தலை தடுக்க பாஜக முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ‘ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பசுக்கள் மீது உண்மையான பாசம் காட்ட வில்லை. மக்கள் வாக்குகளைப் பெறவே அப்படி செய்கின்றனர். எனவே, அவர்கள் வீட்டு முன்பு வயதான பால் கொடுக்காத பசுக் களை கட்டி வையுங்கள். அவற்றை என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். இப்படி செய்தால் உங்களை அவர்கள் அடிப்பார்கள். அதற்காகப் பயப்படாதீர்கள்’ என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பிஹார் மாநிலத்தின் வைஷாலியில் பாஜக பிரமுகர் சந்திரேஸ்வர் பாரதி வீட்டு முன்பு ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர்கள் சிலர் பசுக்களை கட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரேஸ்வர், ஹாஜிப்பூர் சிவில் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் மற்றும் அடையாளம் தெரியாத 5 பேருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இதனால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.