

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. இவரது சகோதரி மிஷல் வதேரா, கடந்த 2001-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இறந்தார். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஓட்டுநர் ஒருவர் ஏற்படுத்திய விபத்தில் அவர் இறந்தார்.
இந்நிலையில், விபத்துகளைத் தடுக்க கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மத்திய, மாநில நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகள், பார்களை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப் பதாவது:
சாலை பாதுகாப்புக்காக நெடுஞ் சாலைகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவு மிகப்பெரிய நடவடிக்கை. என் னுடைய சொந்த சகோதரியையே சாலை விபத்தில் இழந்துவிட்டேன். அப்போது அவருக்கு 33 வயதுதான். அதனால் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூடும் உத்தரவை முழுவதுமாக நான் வரவேற்கிறேன்.
எனினும், நெடுஞ்சாலைகளில் கவுரமிக்க ஓட்டல்கள், அவற்றில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கும் நிலை உருவாகலாம். விதிமுறைகளின்படி குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்த நிறுவனங்களில் மது வழங்குவதை ஓட்டல்கள் அனுமதிப்பதில்லை. இதனால் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், அவற்றில் பணிபுரியும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்படலாம்.
சாலை பாதுகாப்பு விஷயத்தில் கடுமையாக அமல்படுத்த வேண்டும். அதே நேரத்தில் ஓட்டல் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஊழியர்கள் வேலை இழப்பதை தடுக்கும் வகையிலும் மதுக்கடைகளை மூடும் உத்தரவில் எதிர்காலத்தில் மாற்றங்கள் வரும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முகநூலில் ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.