

தாஜ் மஹாலை வக்பு வாரிய கட்டுப்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அசாம் கான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று கூறும்போது, "தாஜ் மஹாலை மத்திய அரசு தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக தாஜ் மஹால் உள்ளது. இதில் கிடைக்கும் வருவாய் ஏழை முஸ்லிம்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும்.
மும்தாஜின் நினைவிடமான தாஜ் மஹால் உலக அதிசயத்தின் ஒன்றாக திகழ்ந்து மிகப் பெரிய வருவாயை ஈட்டுகிறது. இதை முஸ்லிம்களின் கல்விக்காக செலவிடுவதே நியாயமானது.
இதன் மூலம் வரும் வருவாய் ஏழை சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பயன்பட வேண்டும். எனவே, தாஜ் மஹாலை சன்னி முஸ்லிம்களின் மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் வக்பு வாரியமே தாஜ் மஹாலுக்காக நிஜாமை நியமித்து, கிடைக்கும் வருவாயை முஸ்லிம்களின் கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள இயலும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அசாம் கானின் இந்தக் கோரிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒருவரின் தனிப்பட்ட கருத்தை முன்வைத்து மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தக் கூடாது என்று பாஜக செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான ஷாநவாஸ் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
மேலும், அசாம் கானின் கருத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருப்பதாகவும், இதனை அரசியல் லாபத்துக்கு யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.