Published : 04 Oct 2013 10:02 AM
Last Updated : 04 Oct 2013 10:02 AM

தெலங்கானா உதயம்: வரலாற்றுத் தருணம்

1956இல் தெலங்கானாவும் ஆந்திர மாநிலமும் இணைந்து ஆந்திர பிரதேசம் என்கிற மாநிலம் உருவான நாளிலிருந்து இன்று வரை நடந்து கொண்டிருக்கும் தனித் தெலங்கானாவுக்கான போராட்டங்கள் இனி முடிவுக்கு வருமா என்பது போகப்போகத் தெரியும். தனி தெலங்கானா அமைக்கலாம் என்று கடந்த ஜூலை 30 அன்று காங்கிரஸ் தலைமையிலான அரசு எடுத்த ஒருமித்த முடிவுக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது.

தெலங்கானாவை கடுமையாக எதிர்த்து வரும் கடலோர ஆந்திரா, ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. ஒருவேளை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கினால் வன்முறை வெடிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தெலங்கானாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் அது ஒரு வரலாற்றுத் தருணம் என்பதை மறுப்பதற்கில்லை.

கடந்து வந்த பாதை

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழி வாரி மாநிலங்களை மறு சீரமைக்கும் பணி தொடங்கிய போது, தெலங்கானாவையும் ஆந்திரத்தையும் தெலுங்கு மொழி பேசும் மக்களை கொண்ட பகுதிகள் என்கிற அடிப்படையில் ஒன்றிணைத்து, ஆந்திர பிரதேசத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

அப்போதே தெலங்கானா பகுதி மக்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்பதை அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு உணர்ந்தே இருந்தார். இரு மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பை திருமண பந்தத்தோடு ஒப்பிட்ட நேரு, தேவைப்பட்டால் விவாகரத்தும் செய்து கொள்ளலாம் என்று சொன்னார்.அவர் தந்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே 1956ல் ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்டது.

தெலங்கானா போராட்டங்கள்

ஆனால் இணைப்பிற்கு பிறகு தனித் தெலங்கானாவுக்கான கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கி பல சமயங்களில் இயக்கங்களாக உருவெடுத்தன.

குறிப்பாக, 1969, 1972 மற்றும் 2009இல் வெடித்த பெரிய போராட்டங்களின் முடிவில் 2009 டிசம்பரில் தெலங்கானாவை தனி மாநிலமாக உருவாக்குவது குறித்து ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்தார்கள். கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து தெலங்கானா குறித்த முடிவு கைவிடப்பட்டது.

தெலங்கானாவுக்கு ஆதரவு ஏன்?

முடிவு கைவிடப்பட்டாலும் தெலங்கானா வேண்டும் என்ற போராட்டங்கள் ஓயவில்லை. தெலங்கானா வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்கள் தங்களது பகுதிக்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்கள்.

குறிப்பாக நிதி ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு போன்றவை தெலங்கானா பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை என்பது அவர்களது வாதம். தவிர அரசியல் ரீதியாகவும் தெலங்கானா பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆந்திரப் பிரதேசத்துடன் தெலங்கானா இணைக்கப்பட்ட திலிருந்து, கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்களில் வெறும் 6 வருடங்கள் மட்டுமே தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் முதல்வராக பதவி வகித்திருக்கிறா ர்கள் என்று சொல்கிறார்கள்.

தெலங்கானா குறித்து ஆராய அமைக்கப்பட்ட கிருஷ்ணா குழு அறிக்கையின் படி, தெலங்கானவைச் சேர்ந்தவர்கள் பத்து வருடங்களுக்கு முதல்வராக இருந்ததாகவும் சீமாந்திராவைச் சேர்ந்தவர்கள் 42 வருடங்கள் அந்த பதவியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனாலேயே தெலங்கானா ஒதுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது என்று தெலங்கானா ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

தெலங்கானா பகுதிக்கு அரசியல் அதிகாரம் கோரி 2010லிருந்து 2012 வரை சுமார் 300 இளைஞர்கள் உயிரிழந்ததாக அவர்கள் சொல்கிறார்கள்.

தெலங்கானா பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் தெலங்கானா தனி மாநிலமாக அமைந்தால் மட்டுமே தங்கள் பகுதிக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

தெலங்கானா அமைக்க முடிவு

தொடர்ச்சியான போராட்டங்க ளை அடுத்து, கடந்த 30ந் தேதி தெலங்கானாவை அமைக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. முதல் பத்து வருடங்களுக்கு ஆந்திரம், தெலங்கானா இரு மாநிலங்களுக்கும் ஹைதராபாத் தலைநகராக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இன்று மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் ஆந்திரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக, ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி உள்பட அமைச்சர்கள் தெலங்கானாவை எதிர்க்கும் நிலையில் தனிதெலங்கானா அனுமதி பற்றிய அறிவிப்பு பல குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x