

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடியாக, அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்துக்கள் பற்றிய விவரங்களை ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்புக்கு வந்தபி்ன்னர் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனுமதி இல்லாமல் செயல்படும் இறைச்சிக் கூடங்களுக்குத் தடை விதித்தது, பசு வளர்ப்பை ஊக்கப்படுத்த முன்னுரிமை வழங்கியது, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.13-க்கு மூன்று வேளை உணவு வழங்கும் வகையான திட்டங்கள் என அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் அனைவருக்கும் மின்சாரம் திட்டம், தடையற்ற மின்சாரம் போன்றவைக்கும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து பற்றிய விவரங்களை ஆண்டுதோறும் அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமைச்சர்கள் அனைவரும் தங்களது பணிகளில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் செயல்பட வேண்டும். ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதிக்குள் சொத்து பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். தொழிலதிபர்கள் மற்றும் கான்ட்ராக்டர்களிடம் இருந்து இடைவெளியைப் பின்பற்றுவது அவசியம். ரூ.5 ஆயிரத்துக்கு மேலான மதிப்புள்ள பொருட்களை அன்பளிப்பாக வாங்கக்கூடாது.
உயர்தரமிக்க ஓட்டல்களிலோ, பார்ட்டிகளிலோ கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சொந்தக் காரணங்களுக்கோ அல்லது அரசுப் பணி காரணமாகவோ வெளியூர் செல்லும்போது, அங்குள்ள அரசு விடுதிகளில் மட்டுமே தங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னால் யோகி ஆதித்யநாத், அரசுக்குக் கூடுதல் செலவினத்தைத் தவிர்க்குமாறு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.