Last Updated : 02 Jun, 2017 09:03 AM

 

Published : 02 Jun 2017 09:03 AM
Last Updated : 02 Jun 2017 09:03 AM

இடதுசாரிகளைப் பார்த்து பாஜக பயப்படுகிறது: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை முதலில் எதிர்த்தவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். அந்தத் தடையை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும், மத்திய அரசின் தடையை கடுமையாக எதிர்க்கும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். தமது கடிதத்துக்குப் பிரதமர் என்ன பதில் அளிக்கிறார் என்பதை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளார்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்காக, திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை, அவரது வடக்கு பிளாக் அலுவலகத்தில் கடந்த வாரம் சந்தித்தோம். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:

கேரளாவில் இடதுசாரி ஆட்சி என்றாலே நிலச் சீர்திருத்தமாகட்டும், எழுத்தறிவு இயக்கமாகட்டும், மக்கள் திட்டங்களாட்டும் முன்னுதாரண நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றது. அதுபோல் உங்களுடைய அரசின் திட்டம் என்ன?

கேரளாவில் நல்ல கல்வித் திட்டம் உள்ளது. அது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், சில பிரச்சினைகள் நிலவுகின்றன. அவற்றுக்கு தீர்வு காண முன்னுரிமை அளிப்போம். அதற்காக முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வகுப்பு வரை எல்லாவற்றையும் அதிநவீன முறையில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அரசு பள்ளிகள் இனிமேல் அதிநவீன தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களாக மாறும். இந்தத் திட்டம் கேரளா முழுவதும் அமல்படுத்தப்பட்டு விட்டால், உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள மேம்பட்ட பள்ளிகளில் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் கேரள அரசு பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும்.

அதேபோல் சுகாதாரத் துறையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். முதலில் குடும்ப மருத்துவர்கள் முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மாநிலத்தில் உள்ள எல்லா முக்கிய மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க தேவையான எல்லா வசதிகளையும் ஏற்படுத்த நினைக்கிறோம். அடுத்து மருந்துகளின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும்.

ஏற்கெனவே அதற்கான திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். வாழ்க்கை, பொருளாதாரத்தில் மேம்பட ‘லைப்’ என்ற பெயரில் இன்னொரு மிகப் பெரிய திட்டத்தையும் தொடங்கி இருக்கிறோம். கேரளாவில் வீடில்லாமல் யாரும் இல்லை என்ற நிலையை 5 ஆண்டுகளில் அடைவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

கல்வி, சுகாதாரத் துறைகளை பொறுத்த வரையில் கேரளா சிறந்த முறையில் செயல்படுகிறது. ஆனால், வேளாண் துறை? காய்கறிகளுக்கும், மற்ற உணவுப் பொருட்களுக்கும் மற்ற மாநிலங்களைச் சார்ந்துதானே இருக்கிறது?

இந்தப் பிரச்சினையை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். சத்துள்ள உணவை உண்பது மக்களின் உரிமை. எனவேதான் கேரள வேளாண் துறையை மேம்படுத்த ‘பயோ பார்மிங்’ முறைக்கு ஊக்கமளிக்கிறோம். காய்கறிகள், பழங்கள் விஷயத்தில் கேரள மாநிலத்தைச் சுயசார்புள்ளதாக மாற்ற விரும்புகிறோம்.

கேரளாவின் பொருளாதார நிலையும் கவலை அளிப்பதாக இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. பெரிய தொழிற்சாலைகள் இல்லை. எப்படி கேரள பொருளாதாரத்தை உயர்த்த போகிறீர்கள்?

வள ஆதாரங்கள் நிறைந்த மாநிலம் கேரளா அல்ல. இது மிகப்பெரிய சவால். வள ஆதாரங்கள் உங்களிடம் இருந்தால்தான், பெரிய பெரிய தொழிற்சாலைகள் அமைக்க முடியும். இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர, ‘கேரளா உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம்’ (கேஐஐஎப்பி) தொடங்கி இருக்கிறோம். இந்த அமைப்பின் மூலம் பல்வேறு துறை திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிட உள்ளோம்.

ஆனால், தொழிற்சாலைகள் கேரளாவுக்கு வருமா? கேரளா வர்த்தகத்துக்கு ஏற்ற மாநிலமாக இல்லை. இங்குள்ள தொழிற்சங்கங்களின் கலாச்சாரம்தான் முதலீட்டாளர்களைக் கேரளாவுக்கு வரவிடாமல் தடுக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனரே?

அது உண்மையில்லை. கேரளாவில் தொழிற் சங்கங்களின் போக்கால் எந்த தொழிற்சாலை யாவது மூடப்பட்டுள்ளதா? தொழிற்சங்கத்தால் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம் என்று எந்த தொழிற்சாலை உரிமையாளர்களாவது புகார் தெரிவித்திருக்கிறார்களா? கேரளாவை பற்றி பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. கேரளாவுக்குப் புதிய தொழிற்சாலைகளை வரவேற்க புதிய கொள்கைகளை விரைவில் அறிவிக்க இருக்கிறோம். அப்போது நாட்டிலேயே தொழிற்சாலைகள் தொடங்க எல்லா வசதிகளும் கிடைக்கும் மிகச்சிறந்த மாநிலம் என்ற நிலைக்கு கேரளா மாறும்.

உங்கள் இடதுசாரி அரசு இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த விரும்பினால், அதற்கு பாஜக ஆளும் மத்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் உதவிகளைக் கேட்டுப் பெற வேண்டுமே? பாஜக.வுக்கும் குறிப்பாக பிரதமர் மோடிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி என்றாலே சிக்கலானதாக இருக்கிறதே? மத்திய அரசுடன் உங்கள் நிலை என்ன?

இதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளில் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதை பலமுறை நாங்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறோம். அதேநேரத்தில் மத்திய அரசுடன் மாநில அரசுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. உதாரணத்துக்கு, கேரள மாநிலம் சந்தித்து வரும் சில பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்க நினைத்தோம். அதற்காக கேரள அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க நேரம் ஒதுக்கும்படி, சில மாதங்களுக்கு முன்பு கேட்டோம். அதற்கு பிரதமர் அனுமதி அளிக்கவில்லை. வழக்கமாக முதல்வர் தலைமையிலான குழுவைச் சந்திக்க எந்தப் பிரதமரும் மறுப்பதில்லை.

விமர்சனங்கள் எழுந்தாலும், கேரளாவுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவு உறுதியாகவே உள்ளது. உதாரணத்துக்கு கடந்த ஆண்டு மே மாதம் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி பதவியேற்றதும் நாங்கள் டெல்லி சென்றோம். பிரதமர் உட்பட தலைவர்கள் பலரைச் சந்தித்து பேசினோம். அப்போது, கேரளாவில் ஆயுர்வேத நிறுவனம் தொடங்க விரும்பினால், மத்திய அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். உண்மையில் கேரளாவில் உலகத் தரத்தில் ஆயுர்வேத நிறுவனத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் திட்டங்களில் இதுவும் ஒன்று. ஆனால், பிரதமர் அதைப் பற்றி கேட்ட பிறகு இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, இதற்கு மத்திய அரசின் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சுமூகமான உறவு உள்ளது என்று எங்களால் சொல்ல முடியும்.

மார்க்சிஸ்ட் கட்சி பொலிட்பியூரோ உறுப்பினர் என்ற அடிப்படையில் பாஜக.வின் வளர்ச்சியைப் எப்படி பார்க்கிறீர்கள்? மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது..?

மற்ற அரசியல் கட்சிகளைப் போல பாஜக வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல் பாஜக.வை எது வேறுபடுத்தி காட்டுகிறது என்றால், அந்தக் கட்சியை ஆர்எஸ்எஸ் இயக்குகிறது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நிலைநிறுத்தவே பாஜக செயல்படுகிறது. முக்கிய விவகாரங்களில் பாஜக சார்பில் ஆர்எஸ்எஸ் நேரடியாக முடிவெடுப்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

மதச்சார்பின்மையை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மையை, அமைச்சர்கள் சிலர் கூட கடுமையாக விமர்சித்துள்ளனர். இது மதச்சார்பின்மைக்கு நேரிடையாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். நமது அரசியலமைப்பு மதிப்பை கட்டிக் காக்க, பலம் வாய்ந்த எதிர்ப்பு வரவேண்டும். அந்த எதிர்ப்பை காங்கிரஸால் ஏற்படுத்த முடியாது. ஏனெனில், அந்தக் கட்சியைச் சேர்ந்த தேசிய தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் கூட பாஜக.வில் சேர்ந்து வருகின்றனர். எனவே, காங்கிரஸை நம்ப முடியாது. காங்கிரஸை எதிர்க்கட்சியாக பாஜக கருதுவதில்லை.

ஆனால், பாஜக.வைப் பொறுத்தவரை அதன் கொள்கைகளில் முதல் எதிரி இடதுசாரிகள்தான். நாட்டில் இடதுசாரி சக்திவாய்ந்ததாக இல்லை. ஆனாலும், இடதுசாரியைப் பார்த்து பாஜக பயப்படுகிறது. கேரளாவிலும் திரிபுராவிலும் அதை நீங்கள் பார்க்கலாம். திரிபுராவில் இடதுசாரிகளுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட பாஜக முயற்சித்து வருகிறது. இடதுசாரி தான் பாஜக.வின் குறி என்பது இதன் அர்த்தம்.

சமுதாயத்தில் மதரீதியிலான பிரச்சினை களைத் தூண்டிவிட பாஜக.வும் ஆர்எஸ்எஸ்.ஸும் முயற்சிக்கின்றன. அதன்மூலம் பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயமடைய நினைக்கின்றன. இதைத் தடுக்க நாட்டு மக்களை ஆர்எஸ்எஸ்.ஸுக்கு எதிராக ஒன்றுதிரட்ட வேண்டும். கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க அனைத்து ஜனநாயக கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்.

தேர்தல் கூட்டணி ஏற்பட வேண்டும் என்று கூறுகிறீர்களா?

எதிர்ப்பு இயக்கத்துக்கு அரசியல் கூட்டணி எல்லாம் தேவை இல்லை. இது உடனடி அச்சுறுத்தலைச் சமாளிக்க அரசியல் ரீதியான முயற்சிதான். கூட்டணி என்றால் கொள்கை பிரச்சினைகளும் அடங்கி இருக்கும். ஆனால், நாட்டுக்கு அச்சுறுத்தல் என்றால் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதைச் சந்திக்க வேண்டும்.

நேமம் தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஏனெனில், காங்கிரஸ் வாக்குகள் ஆதரவுடன் வெற்றி கிடைத்தது. அவர்களுக்குள் ஏதோ ஒப்பந்தம் இருக்கிறது. எனினும் ஊடகங்கள் பாஜக.வுக்கு கேரளாவில் முக்கியத்துவம் தருகின்றன. மத்திய அரசில் பாஜக உள்ளதால் கூட அந்த முக்கியத்துவத்தை ஊடகங்கள் தரலாம். அதை வைத்துக்கொண்டு கேரளாவில் பாஜக வளர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

கேரளாவில் இடதுசாரி ஆட்சி வந்த பிறகு மார்க்சிஸ்ட் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முடிவு கட்ட நீங்கள் என்ன செய்தீர்கள்?

கேரளாவில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அதன்பிறகும் சில தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால், மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடர நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் நாங்கள் பேசினோம். அவர்க ளிடம் இருந்து சாதகமான பதிலும் வந்துள்ளது.

இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x