Published : 06 Aug 2014 04:49 PM
Last Updated : 06 Aug 2014 04:49 PM

தஸ்லிமாவுக்கு இந்தியக் குடியுரிமை: குரல் கொடுக்கும் கொல்கத்தா எழுத்தாளர்கள்

வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கடந்த சனிக்கிழமை சந்தித்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இந்தியாவில் நீண்டகாலம் தங்கியிருக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது, "உங்களின் கடினமாக காலங்கள் விரைவில் முடிவுக்கு வரும்" என்று ராஜ்நாத் கூறியதாக தஸ்லிமா கூறினார்.

தஸ்லிமா விவகாரத்தில், பாஜக அரசின் அணுகுமுறைக்கு முஸ்லிம் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும், கொல்கத்தாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் தஸ்லிமாவுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கின்றனர்.

இது குறித்து கருத்து கூறிய குடியுரிமை ஆர்வலர் சுஜாடோ பத்ரா, "பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில் தஸ்லிமா எழுதுகிறார். இஸ்லாமிய மதம் தொடர்பான விஷயங்களை பொறுத்து கொள்ளமுடியாத அளவிற்கு, இஸ்லாமியர்கள் எதிரான நாடு அல்ல இந்தியா" என்றார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு, த்விகாண்டிடோ (Dwikhandito) என்ற தலைப்பில் தஸ்லிமா எழுதிய சர்ச்சைக்குரிய நாவல் தடை செய்யப்பட்டதை எதிர்த்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றி பெற்றவர் சுஜாடோ பத்ரா என்பது கவனிக்கத்தக்கது.

இதே பிரச்சினை குறித்து எழுத்தாளர் ஜெயா மித்ரா கூறும்போது, "ஜனநாயக நாடான இந்தியாவில் வாழ்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு. இஸ்லாம் மதத்திற்கு எதிராக எழுதுவதாக தஸ்லிமாவை இந்தியாவில் தங்குவதற்கு தடைவிதிப்பது பாசிசத்திற்கு சமமானது. இந்தியா மதச்சார்பற்ற நாடாகும். அத்தகைய நாட்டில் அவர் இருப்பதற்கு அனுமதி வழக்குவது இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை தூக்கி நிறுத்தும்" என்றார்.

தனது சொந்த மதமான இஸ்லாம் குறித்து விமர்சிப்பதற்கு தஸ்லிமாவுக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்று தெரிவித்த எழுத்தாளர் நபனீதா தேவ் சென், "மதம் என்பது மக்களின் மனத்தைத் திறந்து, சுதந்திரமாக சிந்திக்க உதவவேண்டும்" என்று கூறியுள்ளார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமா, 1994-ல் தனது நாட்டை விட்டு வெளியேறினார். அவர் எழுதிய லஜ்ஜா என்ற நூலில் இஸ்லாமிய விரோத கருத்துகள் இருப்பதாக கூறி பழமைவாத முஸ்லிம் அமைப்புகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தன. இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளாக அவர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் வசித்து வருகிறார். அவர் ஸ்வீடன் நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார். என்றாலும் அவர் நிரந்தரமாக இந்தியாவில், குறிப்பாக கொல்கத்தாவில் வசிக்கவே விரும்புகிறார். கடந்த 2004-ம் ஆண்டு முதல், அவர் தொடர்ந்து இந்திய விசா பெற்று வருகிறார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தஸ்லிமாவுக்கு எதிராக நடந்த கலவரத்திற்குப் பின், அவர் அங்கிருந்து வெளியேறிய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x