Published : 09 Nov 2014 09:36 AM
Last Updated : 09 Nov 2014 09:36 AM

நலிவடைந்து வரும் பனாரஸ் பட்டுத் தொழில்: மறுவாழ்வு கொடுப்பாரா பிரதமர் நரேந்திர மோடி?

நுணுக்கமான வேலைப்பாடுகள் மற்றும் வித்தியாசமான நிறங்களுக்கு பெயர் போனது பனாரஸ் பட்டு. முகலாயர் காலத்தில் கிடைத்த புதிய பரிமாணம் அதை உலக அளவில் புகழ் பெறச் செய்தாலும் அதற்கு, காஞ்சிபுரம் மற்றும் மைசூர் பட்டு போன்றவைக்கு கிடைத்த வளர்ச்சி கிடைக்கவில்லை என நிரந்தரப் புகார் உள்ளது.

வாரணாசி தொகுதி எம்.பி.யாக உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பனாரஸ் பட்டுக்கு மறுவாழ்வு கொடுப்பாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

காசி எனும் வாரணாசிக்கு பனாரஸ் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதற்கு காரணம் அங்கு நெய்யப்படும் பனாரஸ் பட்டுதான். ராமாயணம், மகாபாரதத்தில் பனாரஸ் பட்டுத்துணி பற்றிய குறிப்புகள் உள்ளன.

கி.மு. 6-ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த பாலி மொழியில் இந்த பட்டுத்துணி, ‘காசிகாம் வட்டம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் கத்தரி எனும் பிற்படுத்தப்பட்ட இந்து சமூகத்து நெசவாளிகளால் பனாரஸ் பட்டு நெய்யப்பட்டு வந்தது. 14-ம் நூற்றாண்டு முதல் பனாரஸ் பட்டு நெசவில் இஸ்லாமியர்கள் ஈடுபடத் தொடங்கினர்.

பின்னர், முகலாய மன்னர்களும், ராஜபுத்திரர்களும் பனாரஸ் பட்டுத்துணியை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கினர். இதையடுத்து நுணுக்கமான வேலைப்பாடு மற்றும் வித்தியாசமான நிறங்களுக்கு பனாரஸ் பட்டுத்துணி மற்றும் சேலைகள் உலகம் முழுவதும் புகழ் பெறத் தொடங்கின.

1990-ம் ஆண்டு வரை பெரும்பாலும் கைத்தறியால் மட்டுமே தயாரான பனாரஸ் பட்டு விசைத்தறிகளுக்கு மாறிய போது, அதன் வளர்ச்சி வேகமெடுத்தது. எனினும், ஒரு கட்டத்துக்குப் பின், அதன் முன்னேற்றம் தடைபட்டுவிட்டது.

மோடி திட்டத்தால் பயனில்லை

நேற்று முன் தினம் மோடி அடிக்கல் நாட்டிய ரூ. 200 கோடி செலவிலான வர்த்தக மையம், பனாரஸின் பட்டு வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படாது என்று கூறப்படுகிறது. காரணம், பனாரஸ் பட்டின் உண்மையான பிரச்சினைகளை இன்னும் எந்த அரசும் தீர்க்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து வாரணாசியை சேர்ந்த ‘கைத்தறிகளை காப்போம்’ போராட்டக் குழுவின் அமைப்பாளர் மஹபூஸ் ஆலம் கூறும்போது, ‘பனாரஸிற்கு பின் ஜவுளித்துறையில் உருவாகி வளர்ந்த மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில நெசவாளிகள் இன்று இந்தியாவில் முதலிடத்தில் உள்ளனர். இதற்கு அங்கு கிடைக்கும் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு, தடையில்லா மின்சாரம் ஆகியவை முக்கிய காரணங்கள். நூல், சாயம் போன்ற மூலப்பொருட்கள் அங்கேயே தயாராகின்றன. இந்த வசதிகள், பனாரஸ் பட்டு உற்பத்திக்கு இன்றுவரை கிடைக்கவில்லை. இந்த வசதிகளை எங்கள் தொகுதியின் எம்.பி.யான பிரதமர் மோடி ஏற்படுத்தித் தந்தால் ஒழிய, பனாரஸ் பட்டு தொழிலை காப்பாற்ற முடியாது.

கைத்தறி நெசவாளர்களால்தான் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், புதிய வகை நிறங்கள் சேர்த்து சிறந்த வகை பனாரஸ் சேலைகளை தயாரிக்க முடியும். இந்த டிசைன்களுக்கு காப்புரிமை பெறும் முறை இல்லாததால், சந்தைக்கு வந்த மறுநாளே அதே போல விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்டு விடுகின்றன” என்றார்.

பனாரஸ் பட்டு சேலைகள் மற்றும் துணிகளை முஸ்லிம்கள் தயாரித்தாலும் அவற்றை விற்பனை செய்யும் பணியை பெரும்பாலும் இந்துக்களே மேற்கொள்கின்றனர். இரு மதத்தினரும் ஒருவரையொருவர் சாந்திருப்பதால், இங்கு மதக்கலவரம் ஏற்படுவதில்லை.

இவர்கள் ஒற்றுமையை, ‘கங்கா யமுனா தெஜ்ஜீப்’ (கங்கை மற்றும் யமுனை ஆறு ஒன்றாகக் கலந்தது போல) எனவும், ‘சமாஜிக் தானா பானா’ (பட்டுத்துணியில் குறுக்கும் நெடுக்குமாக இணையும் நூல் போல், சமூகத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமை உள்ளது) எனவும் கூறுவது உண்டு. இதை வர்த்தக மைய தொடக்க விழாவில் குறிப்பிட்டு மோடி பேசிய போது, அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

2001-ம் ஆண்டு பனாரஸ் பட்டு சேலையை நெய்து, சிறந்த டிசைனுக்கான குடியரசுத் தலைவர் விருதை பெற்ற நோமான் ஆப்தின் கூறும்போது, “இப்போது பலரும் விசைத்தறிக்கு மாறிவிட்டனர். சிலர் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திற்கு இடம் பெயர்ந்து விட்டனர். இதனால், கைத்தறி பட்டில் நுணுக்கமான வேலைப்பாடு செய்து வந்த நெசவாளிகளுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இவர்களிடம் உள்ள தொழில் திறனை காக்க அரசு ஒன்றும் செய்யவில்லை. அதற்கான பயிற்சிக் கூடங்களும் இங்கு இல்லை. வர்த்தக மையங்களை தொடங்குவதுடன் மூலப்பொருட்கள் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

நெசவுத்தொழிலாளர்கள் தற்கொலை

சுமார் 12 லட்சம் பேர் இத்தொழிலை நம்பியுள்ளனர். விவசாயிகளை போல், தொழில் நஷ்டத்தால் கைத்தறி நெசவாளர்களும் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. 2002 வரை 175 கைத்தறி நெசவாளிகள் தம் உயிரை மாய்த்துக் கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x