

இயற்கை வளங்கள் அரசிடம் இருப்பதை விட மக்கள் கையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலம், டால் டாங்கஞ்ச் என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சோனியா பேசியதாவது:
இயற்கை வளங்கள் அரசிடம் இருப்பதை விட மக்களிடம் இருக்க வேண்டும். இது மக்களின் முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்கும். பழங்குடியினர், ஏழை மக்கள், தலித்துகள், பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிமை கள் வழங்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. ஆனால் இதில் திருத்தம் செய்யும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சட்டத்தில் எந்த மாற்றம் செய்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முயற்சி மற்றும் திட்டங்களால்தான் நாடு தற்போது வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டுள்ளது.
ஜார்க்கண்ட்டில் 11 ஆண்டுகள் பாஜக ஆட்சி செய்துள்ளது. எனினும் இம்மாநிலத்தில் எண்ணிலடங்கா பிரச்சினைகள் இருப்பதை, 2 நாட்களுக்கு முன் இங்கு பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடியிடம் மக்கள் கூறவேண்டும்.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ஜார்க்கண்ட்டில் மின்சாரம், சாலை வசதி, குடிநீர், சுகாதாரம் போன்ற திட்டங்களுக்காக கோடிக் கணக்கில் நிதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த நிதியை இங்கு ஆட்சிசெய்த பாஜக பயன்படுத்த வில்லை. இவ்வாறு சோனியா பேசினார்.