

திருப்பதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 74 இரட்டையர்கள் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 22-ம் தேதி சர்வதேச இரட்டையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், திருப்பதியில் உள்ள ‘ஸ்பிரிங் டேல்’ தனியார் பள்ளியில் இரட்டையர் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப் பட்டது.
இந்நிகழ்ச்சியில், இந்த பள்ளியில் எல்கேஜி முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 74 இரட்டையர்கள் (37 ஜோடிகள்) கலந்து கொண்டனர். ஒரே மாதிரி உருவம் கொண்ட இவர்கள், ஒரே மாதிரியான உடை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்களது பழக்க வழக்கங்களும் 90 சதவீதம் வரை ஒரே மாதிரி இருந்தன. தேர்வில்கூட சில இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் வாங்கி வருவதும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.