Published : 17 Feb 2016 04:11 PM
Last Updated : 17 Feb 2016 04:11 PM

கண்ணய்ய குமாருக்கு மார்ச் 2 வரை நீதிமன்ற காவல்: பாட்டியாலா வளாகத்தில் மீண்டும் வன்முறையால் பரபரப்பு

ஜே.என்.யூ. விவகாரத்தில், அதன் மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்ய குமாருக்கான நீதிமன்றக் காவலை மார்ச் 2-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி - பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் தாக்குதல் சம்பவம் நடந்தததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாட்டியாலா கோர்ட் சம்பவங்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்ய குமாரை மார்ச் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட கண்ணய்ய குமாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கோர்ட் வளாகத்திற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கண்ணய்ய குமாருக்கு உள்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கண்ணய்ய குமாரை கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் சிலர் தாக்கியதாக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றப் பார்வைக்கு எடுத்துச் சென்றார்.

மேலும், பத்திரிகையாளர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ‘சட்டம் ஒழுங்கு பிரச்சினை கவலையளிப்பதாக உள்ளது’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதனையடுத்து வழக்கறிஞர்கள் 6 பேர் கொண்ட குழு, அதாவது, கபில் சிபல், ராஜீவ் தவான், துஷ்யந்த் தவே, ஏ.டி.என்.ராவ், அஜித் சின்ஹா மற்றும் ஹரின் ராவல் அடங்கிய குழு உடனடியாக பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் வளாகத்திற்கு விரைந்து அங்கு என்ன நடக்கிறது என்ற விவரத்தை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள், சில பத்திரிகையாளர்களுடன் கோர்ட் அறையில் சிக்கியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து டெல்லி போலீஸ் வழக்கறிஞர் அஜித் சின்ஹாவிடம் போலீஸ் கமிஷனர் பாஸி உடனடியாக கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அறையில் சிக்கியுள்ள வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்களை உடனடியாக வேளியே கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

உத்தரவையடுத்து போலீஸ் கமிஷனர் பாஸி கோர்ட் அறையில் சிக்கியுள்ள கண்ணய்ய குமார், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கினார்.

முந்தைய செய்திப் பதிவு:

உச்ச நீதிமன்ற கெடுபிடிகளைத் தாண்டியும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.

டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தினுள் வழக்கறிஞர்கள் அணியும் கருப்பு அங்கியில் வந்த சிலர் அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவரையும் ஜே.என்.யூ மாணவர் ஒருவரையும் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் இந்திய கொடியை ஏந்தியபடி வந்தேமாதரம், வந்தேமாதரம் என கோஷமிட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்த மற்றொரு பத்திரிகையாளர் கூறும்போது நீதிமன்ற வளாகத்திலிருந்த போலீஸார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தடுக்கவில்லை என்றார்.

கடந்த 15-ம் தேதியன்று கண்ணய்ய குமார் ஆஜர்படுத்தப்பட்டபோது ஜேஎன்யூ, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று கண்ணய்ய குமாரை மீண்டும் ஆஜர்படுத்தும்போது வெளிநபர்களுக்கு நீதிமன்றத்தினுள் அனுமதி அளிக்கக்கூடாது போன்ற கெடுபிடிகளை உச்ச நீதிமன்றம் விதித்திருந்து குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x