Published : 20 Jun 2016 09:10 AM
Last Updated : 20 Jun 2016 09:10 AM

472 மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த ‘தந்தை’

தந்தையர் தினத்தில் குஜராத்தைச் சேர்ந்த மகேஷ் சவானிக்கு அவரின் 472 மகள்களிடமிருந்து வாழ்த்துச் செய்தி வந்திருக்கிறது. உலகின் பெருமை மிகு தந்தையாக இருக்கிறார் மகேஷ் சவானி. இந்த 472 பேரும் அவர் பெற்ற மகள்களல்ல. அவரால் திருமணம் செய்துவைக்கப்பட்ட, தந்தையை இழந்த மகள்கள்.

மகேஷ் சவானிக்கு தற்போது 47 வயதாகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் மகேஷின் அண்ணன் இறந்துவிட, அவரின் இரு பெண்களுக்கு தந்தைக்குரிய இடத்தில் இருந்து திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். அப்போதுதான், தந்தையை இழந்த மகள்களின் நிலை குறித்து யோசித்திருக்கிறார். 2008-ல் தொடங்கி, தற்போது வரை அவ்வாறு தந்தையை இழந்த ஏழைப் பெண்களுக்கு தந்தைக்குரிய இடத்திலிருந்து தன் சொந்த செலவில் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் அவர்களின் வாழ்க்கைக்கு உதவி வருகிறார். இதுவரை 472 ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

பாவ்நகர் அருகே ரபர்டா கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் சவானி ரியல் எஸ்டேட், வைர வியாபாரம் செய்து வருகிறார். பள்ளியும் நடத்தி வருகிறார். 40 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த மகேஷின் தந்தை வல்லப்பை, வைரம் பட்டை தீட்டுபவராக வேலைக்குச் சேர்ந்து, பிறகு படிப்படியாக உயர்ந்து, தொழில் நிறுவன உரிமையாளராக உயர்ந்துள்ளார்.

தற்போது மகேஷின் குடும்பம் ஒரு ஏழைப்பெண்ணுக்கு தலா ரூ. 4 லட்சம் செலவு செய்து திருமணம் நடத்தி வைக்கும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றுள்ளது.

“கணவனை இழந்த ஒரு பெண் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைப்பது என்பது மிகவும் கடினமானது” என்கிறார் மகேஷ்.

தந்தையை இழந்த ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும்போது தங்க, வெள்ளி நகைகள் மட்டுமின்றி, ஆடைகள், பண்ட பாத்திரங்கள், குடும்பம் நடத்துவதற்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களையும் வாங்கித் தருகிறார் மகேஷ்.

நடப்பாண்டில் 216 பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க இருக்கிறார் மகேஷ் சவானி. இதில், ஜாதி, மத வேறுபாடுகளை அவர் பார்ப்பதில்லை.

தந்தை ஸ்தானத்திலிருந்து மகேஷால் திருமணம் செய்து வைக்கப்பட்ட நஹேடா பானு கூறும்போது, “சிறுவயதில் தந்தையை இழந்துவிட்டேன். 2014-ல் ஆரிஃப் என்பவருடன் திருமணமானது. மகேஷ் அப்பா என்னைப் பொறுத்தவரை தந்தைக்கும் மேலானவர். உலகி லுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரைப் போன்ற தந்தை கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை” என்றார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் தந்தையை இழந்த ஹினா கதிரியா கூறும்போது, “நமக்கு எப்போது தேவைப்பட்டாலும் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், மகேஷ் அப்பா வந்துடுவார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x