

சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு கல்வி நிறுவனங்கள், அரசு துறைகளில் முறையே 12 மற்றும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதமும், பழங்குடியினர்களுக்கு 6 சதவீதமும் இடஒதுக்கீடு அமலில் இருந்தது. முந்தைய தேர்தலின்போது இடஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி நேற்று சிறப்பு சட்டப் பேரவை கூட்டப்பட்டு இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தன. அதேசமயம் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசமைப்பு விதிகளுக்கு எதிரானது என கண்டித்தது. மேலும் சட்டப்பேரவையில் 5 பாஜக எம்எல்ஏக்களும் நேற்று அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 5 எம்எல்ஏக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பாஜக தொண்டர்கள் நேற்று சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர் | படங்கள்: கே.வி.எஸ்.கிரி |
இதையடுத்து அவர்கள் அனைவரும் சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக தொண்டர்களும் அவர்களுடன் இணைந்து சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர்.
சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.
மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பேட்டியளித்த முதல்வர் சந்திரசேகர ராவ், ‘‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் 69 சதவீதம் அளவுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. வேறு சில மாநிலங்களிலும் 50 சதவீதம் வரை இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அவ்வாறு இருக்கும்போது தெலங் கானாவுக்கு மட்டும் எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்’’ என்றார்.