

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில், 7 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
மும்பை மாநகராட்சியில் சிவசேனாவும் பாஜகவும் சம பலத்துடன் உள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த மாக காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 10 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி, பஞ்சாயத்து உட்பட 1514 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 16, 21-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 இடங்கள் உள்ளன. இதில் சிவசேனா 84 இடங்களையும் பாஜக 80 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸுக்கு 31 இடங்களும் தேசியவாத காங்கிரஸுக்கு 7 இடங்களும் கிடைத்துள்ளன.
மும்பை மாநகராட்சியில் பெரும்பான்மை பலத்தை எட்ட 114 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
புணே, நாசிக், உலாஸ்நகர், அகோலா, நாக்பூர், அமராவதி உள்ளிட்ட 7 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. பெரும்பாலான மாநகராட்சிகளில் சிவசேனா 2-ம் இடத்தில் உள்ளது. நாக்பூர் மாநகராட்சியில் மட்டும் காங்கிரஸ் கூடுதல் இடங்களைப் பிடித்துள்ளது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை உள்ளிட்டவை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் சஞ்சய் நிருபம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கட்சியின் தோல்விக்கு முழு பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
யாருடன் கூட்டணி?
மாநிலத்தில் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. எனினும் உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. அண்மைக்கால மாக இரு கட்சிகளுக்கு இடையே விரிசல் அதிகரித்து வருகிறது.
‘மகாராஷ்டிராவில் ஆளும் பாஜகவுக்கு அளித்து வரும் ஆதரவு தற்காலிகமானது’ என்று சிவசேனா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மும்பை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளில் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்குமா அல்லது வேறு கட்சிகளுடன் கைகோர்க்குமா என்பது விரைவில் தெரியும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.