

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் விசாரணை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக எம்.பி. மைத்ரேயன் வலியுறுத்தினார்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாநிலங்களவை கூடியபோது அதிமுக எம்.பி. மைத்ரேயன் அவையில் பேசுவதற்கு அனுமதி கோரினார். அவையின் துணைத்தலைவர் குரியன் அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய மைத்ரேயன், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நிலவும் சந்தேகங்கள் குறித்து மத்திய அரசு சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். நீதி விசாரணையோ, சிபிஐ விசாரணையோ நடத்தப்பட வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் முரண்பட்ட தகவல்கள் இருக்கின்றன. எனவே, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.
விஜிலா சத்யானந்துக்கு கண்டனம்:
மைத்ரேயன் அவரது வாதங்களை முன்வைக்கும்போது அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் தொடர்ந்து அவையில் கூச்சலிட்டு குழப்பத்தை விளைவித்தார். அவையின் துணைத்தலைவர் குரியன், அமைதி காக்குமாறு விஜிலாவுக்கு பலமுறை வலியுறுத்தினார். ஆனால், விஜிலா அதை மீறியும் கூச்சலிட்டதால் கோபமடைந்த குரியன், "உறுப்பினர் ஒருவர் பேசுவதற்கு அவையில் அனுமதி அளிக்கப்பட்டால் அதற்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நான் கேட்க முடியாத அளவுக்கு நீங்கள் கூச்சலிடுகிறீர்கள். இப்படி நடந்துகொள்வதற்கான அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்?
அவர் ஒருவேளை ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். ஏனென்றால், அவர் சொன்னது எதுவும் உங்கள் கூச்சலால் எனக்குக் கேட்கவில்லை.
நீங்கள் ஒரு பெண் எம்.பி. எனது சகோதரி போன்றவர். ஒரு பெண் உறுப்பினர் என்பதாலேயே நான் இவ்வளவு பொறுமையாக பேசிக் கொண்டிருக்கிறேன். இதுவே, வேறு உறுப்பினராக இருந்திருந்தால் அவர் மீது நிச்சயம் அவையின் மாண்பை குலைத்ததற்காக நடவடிக்கை எடுத்திருப்பேன்" என்றார். குரியனின் காட்டமான கண்டிப்பை அடுத்து விஜிலா அமைதியாக இருக்கையில் அமர்ந்தார்.