Published : 24 Nov 2016 08:41 PM
Last Updated : 24 Nov 2016 08:41 PM

வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்கு தடை இல்லை: 500, 1000 நோட்டுகளை இனி வங்கிகளில் மாற்ற முடியாது

பெட்ரோல் பங்க், மருத்துவமனை, பள்ளிகளில் டிசம்பர் 15-ம் தேதி வரை பழைய 500 ரூபாய் செலுத்தலாம்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் இனி மாற்ற முடியாது. டிசம்பர் 30-ம் தேதி வரை டெபாசிட் மட்டுமே செய்ய முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல் பங்க், மருத்துவ மனைகள், அரசு சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை களுக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பு நீக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி இரவு அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் டிசம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இது மட்டுமன்றி பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், பால் விற்பனை யகங்கள், ரயில் முன்பதிவு மையங்கள் மற்றும் அரசு சேவை களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் நவம்பர் 14-ம் தேதி வரை ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

மத்திய அரசின் அறிவிப்பை யடுத்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள், அஞ்சல கங்கள், பெட்ரோல் பங்க்குகளில் கடந்த 15 நாட்களாக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மத்திய அரசின் கெடு முடிவடைய இருந்த தால் 500, 1000 ரூபாய் நோட்டு களை மாற்றுவதற்கு பெட்ரோல் பங்க்குகளில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு நேற்றிரவு சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. அவற்றின் விவரம் வருமாறு:

* பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி, அஞ்சலக கவுன்ட்டர்களில் மாற்றுவதற்கான காலக்கெடு 24-ம் தேதி (நேற்று) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. இந்த நோட்டுகளை இனி வங்கிகளில் மாற்ற முடியாது. ஆனால், அவற்றை டெபாசிட் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

* ஏற்கெனவே அனுமதிக்கப் பட்ட மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், ரயில் முன்பதிவு மையங்கள், பால் விற்பனையகங்கள் உள்ளிட்ட பொது சேவைகளுக்கு மட்டும் டிசம்பர் 15 வரை பழைய ரூ.500 நோட்டுகள் ஏற்கப்படும். ரூ.1000 நோட்டுகளை இனி எங்கும் பயன்படுத்த முடியாது.

* வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தங்கள் நாட்டு பணத்தை வாரத்துக்கு ரூ.5 ஆயிரம் என்கிற அளவில் மாற்றிக் கொள்ளலாம். வெளிநாட்டவர்கள் பணம் மாற்றும் விவரம் அவர்களின் பாஸ்போர்ட்களில் பதிவு செய்யப்படும்.

* அரசு பள்ளிகள், கல்லூரி கட்டணங்களுக்காக பழைய ரூ.500 நோட்டுகள் ஏற்கப்படும். அதிகபட்சம் ரூ.2,000 வரை கட்டணமாக செலுத்தலாம்.

* ப்ரீ பெய்டு மொபைல் ரீசார்ஜ் கட்டணத்துக்காக ரூ.500 நோட்டுகளை 500 ரூபாய் வரை பயன்படுத்த முடியும். நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைகளில் ரூ.5000 மதிப்பிலான பொருட்களை ரூ.500 நோட்டுகளை கொண்டு ஒருமுறை மட்டும் வாங்கிக் கொள்ளலாம்.

* தனி நபர்கள் மற்றும் குடி யிருப்புகளுக்கான மின்சாரம், குடி நீர் கட்டணத்துக்காக ரூ.500 நோட்டுகளை செலுத்தலாம்.

* சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. டிசம்பர் 3 முதல் 15-ம் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகளை கொண்டு சுங்கக்கட்டணம் செலுத்தலாம்.

இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய ரூ.500 நோட்டு

500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதில் ரூ.2000 நோட்டுகள் பரவலாக புழக் கத்துக்கு வந்துள்ள நிலையில், ரூ.500 நோட்டுகள் பெரியளவில் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தன. இந்நிலையில், தற்போது குறைந்த அளவில் ரூ.500 நோட்டுகள் புழக்கத்துக்கு வரத் தொடங்கி யுள்ளன.

சென்னையில் நேற்று பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங் களில் ரூ.5 கோடி அளவுக்கு புதிய ரூ.500 நோட்டுகள் நிரப்பப் பட்டதாகவும், வங்கிக் கிளை களுக்கு இன்னும் புதிய ரூ.500 நோட்டுகள் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் புதிய ரூ.500 நோட்டுகள் பரவலாக எல்லா வங்கி களின் ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிக் கிளை களில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x