காசியில் காஞ்சி பெரியவர் ஜெயந்தி மஹோத்சவம்: 3 படகுகளில் கங்கையில் தெப்ப உற்சவம்

காசியில் காஞ்சி பெரியவர் ஜெயந்தி மஹோத்சவம்: 3 படகுகளில் கங்கையில் தெப்ப உற்சவம்
Updated on
2 min read

உ.பி.யின் காசி நகரில், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது ஆச்சாரியாரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் (மகா பெரியவர்) ஜெயந்தி மஹோத்சவம் நடைபெற்று வருகிறது. இதன் ஆறாவது நாளான நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது.

உ.பி.யில் காசி எனப்படும் வாரணாசியிலும் காஞ்சி காமகோடி பீடத்தின் மடம் உள்ளது. இங்கு ஹனுமன் காட் (ஹனுமன் கரை) பகுதியில் அமைந்துள்ள காஞ்சி மடத்தில் ஸ்ரீமகா பெரியவரின் ஜெயந்தி மஹோத்சவம் கடந்த 7 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனுஷம் இவருடைய நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம், அனுஷ நட்சத்திர நாளில் அவரது ஜெயந்தி கொண் டாடப்படுகிறது. இந்த விழா 6 நாள் முன்னதாக தொடங்கி, அனுஷ நட்சத்திர நாளில் முடிவடையும்.

இந்த ஆண்டு அவரது 124-வது ஜெயந்தி விழா கடந்த 6 நாட்களாக இங்குள்ள காஞ்சி மடத்தில் நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை நாராயண கனபாடி, சந்திரசேகர கனபாடி உள்ளிட்ட காசி பண்டிதர்கள் செய் துள்ளனர். விழாவில் சதுர்வேதம், புராணம், பாகவதம், மகாருத்ரம் ஆகிய பாராயண உபநியாசங்கள் நடைபெற்றன. இதன் உபநியாசங் களைத் தமிழகத்தில் இருந்து வந்த மற்றும் காசியில் வாழும் வேதவிற்பன்னர்கள் வழங்கினர்.

இது குறித்து விழா அமைப் பாளர்களில் ஒருவரான சந்திர சேகர கனபாடி கூறும்போது, “உலக மக்கள் அனைவரும் நன்றாக வாழவும், குறிப்பிட்ட காலகட்டத்தில் மழை தவறாமல் பெய்யவும் இவற்றை நடத்துகிறோம். இவை மகா புருஷரான ஸ்ரீமகா பெரியவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள். இதனால் அவரது ஜெயந்தியில் இதற்காக வேண்டி னால் அது தவறாமல் நடைபெறும் என்பது எங்கள் நம்பிக்கை ஆகும்” என்றார்.

விழா அரங்கில் ‘தி இந்து’ வின் ‘ஆனந்தஜோதி’ இணைப் பிதழில் மகா பெரியவர் பற்றி வெளியான செய்திகள் பக்தர் களின் பார்வைக்காக வைக்கப் பட்டிருந்தன.

கங்கையில் தெப்ப உற்சவம்

மகா பெரியவர் ஜெயந்தியின் ஆறாவது நாளான நேற்று கங்கை யில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்ற உற்சவத்தில் மூன்று நீண்ட படகுகளில் பக்தர்கள் பயணித்தனர். இந்தப் பயணம், கங்கையின் கரைகளில் ஒன்றான அனுமன் காட் பகுதியில் தொடங்கி அசுவமேத காட் வரை சென்று திரும்பியது. இதில் பயணம் செய்த சுவாமிக்கு அர்ச்சனை, தூபம், தீபம் மற்றும் நைவேத்தியம் செய்யப்பட்டன. புராணத்துடன் படகுகளில் கர்நாடக சங்கீத இசையும் வாசிக்கப்பட்டது.

தமிழகத்தில் தெப்ப உற்சவம் கோயில் குளங்களில் நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் குளங்களின் ஓரமாக நின்று உற்சவ மூர்த்தியை பரவசப்படுவது உண்டு. ஆனால், மகா பெரியவருக்கு காசியில் நடத்தப்பட்ட தெப்ப உற்சவத்தில் தாங்களும் சேர்ந்து பயணிக்கும் பாக்கியம் கிடைத்திருப்பதாக பக்தர்கள் பெருமிதம் கொண்டனர்.

இந்த தெப்ப உற்சவத்தில், அன்றாடம் அசுவமேத காட்-ல் நடைபெறும் கங்கா தேவியின் தீபாராதனையும் நடைபெற்றது. மகா பெரியவர் ஜெயந்தியின் இறுதி நாளான இன்று ஹனுமன் காட்-ல் சதுர்வேத பாராயணம் பூர்த்தி செய்யப்பட்டு சண்டி ஹோமம், மகாருத்ர ஹோமம் மற்றும் பூரண அஹுதியுடன் நிகழ்ச்சி நிறைவுபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in