

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பின் நகல் கோரப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈரானில் சிறுதொழில் நடத்தி வந்த இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தான் சென்றபோது கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ரா உளவு அமைப்புக்காக உளவு பார்க்க வந்ததாகவும், கராச்சி குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. அதே சமயம் அவர் கடற்படையில் இருந்து கடந்த 2002-ம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டதாக இந்தியா தெரிவித்தது. எனினும் அதை ஏற்காத பாகிஸ்தான், அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த அந்நாட்டின் ராணுவ நீதிமன்றம் அண்மையில் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதற்கு நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொலையாகி விடும் என்றும், இரு தரப்பு உறவுகளில் கடும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் பாகிஸ் தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே, பாகிஸ்தான் வெளியுறவு செயலர் டெஹ்மினா ஜன்ஜூவாவை சந்தித்து குல்பூஷண் ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பின் நகலை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய வசதியாக குல்பூஷண் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஏற்கெனவே 13 முறை அனுமதி மறுத்த பாகிஸ்தான், 14-வது முறையாக கேட்கப்பட்ட அனுமதிக்கும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதே போல் குற்றப்பத்திரிகை மற்றும் தீர்ப்பு நகல்களை வழங்குவது குறித்தும் எந்த உறுதியும் அளிக்க வில்லை. இதுகுறித்து வெளி யுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே நேற்று கூறும் போது, ‘‘பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை’’ என்றார்.
ஐ.நா.வில் அறிக்கை தாக்கல்
இந்நிலையில் ஜாதவுக்கு எதிராக புதிய ஆதாரங்கள் அடங்கிய அறிக்கையை பாகிஸ் தான் தயாரித்து வருவதாகவும், அதனை ஐ.நா. வசம் ஒப்படைக்க வுள்ளதாகவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.
ஜாதவ் குற்றத்தை ஒப்புக் கொண்ட வீடியோ காட்சிகள், நீதிமன்ற விசாரணையின்போது அவர் அளித்த வாக்குமூலங்கள் ஆகியவை அதில் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ராணுவ நீதிமன்றத்தின் விரிவான அறிக்கையும் அதில் இணைக்கப்பட்டிருப்பதாக பாகிஸ் தான் ஊடகங்கள் தெரிவித் துள்ளன.