Last Updated : 16 Jan, 2014 12:00 AM

 

Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM

ஆம் ஆத்மியில் மீண்டும் உட்கட்சி பூசல்: வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எம்.எல்.ஏ. புகார்

ஆம் ஆத்மி கட்சியில் மீண்டும் உட்கட்சி பூசல் எழுந்துள்ளது. டெல்லி முதல்வராக பதவியேற்றுள்ள இக்கட்சியின் அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார் என இக்கட்சி எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி (39) புகார் கூறியுள்ளார்.

இது குறித்து வினோத்குமார் பின்னி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில், “மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றத் தவறி விட்டது. மக்களிடம் சொன்னதற்கும், இப்போது செய்து கொண்டிருப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இது குறித்த மக்களின் அதிருப்திகளை வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிப்பேன். இதை மூடிய கதவுகளுக்குள் கூறுவதில் பயனில்லை” என்றார்.

இதுகுறித்து கேஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டனர். இதல் கேஜ்ரிவால் கூறுகையில், “வினோத்குமார் பிண்ணி முதலில் அமைச்சர் பதவி கேட்டு வந்தார். பிறகு மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் கேட்டார். வரும் மக்களவை தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட அனுமதி அளிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். கட்சியை விட்டு செல்ல விரும்புபவர்கள் வேண்டுமானால் இத்தேர்தலில் போட்டியிடலாம்” என்றார்.

இது தொடர்பாக பின்னி மீண்டும் கூறுகையில், “கேஜ்ரிவால் கூறுவது பொய். நாளைய செய்தியாளர் கூட்டத்தில் அனைத்தும் கூறவிருக்கிறேன்” என்றார்.

இந்நிலையில் பின்னியின் கருத்து குறித்து விளக்கம் கேட்டு கட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆம் ஆத்மியில் முதன் முறையாக உருவாகியுள்ள இந்த மோதலால் அக்கட்சியில் பிளவு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பகிறது.

டெல்லி அமைச்சரவையில் தமக்கும் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தா பிண்ணி. ஆனால் கிடைக்கவில்லை. இதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். அதன் பிறகு அவரிடம் கேஜ்ரிவால் பேசி, கட்சியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமித்தார்.

இவர், டெல்லியின் லக்ஷிமி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.கே.வாலியை எதிர்த்து வென்றவர். 2009 முதல் காங்கிரஸின் தீவிர தொண்டராக இருந்த பின்னி, 2011ம் ஆண்டு அண்ணா ஹசாரே லோக்பால் போராட்டம் தொடங்கியபோது அவருடன் இணைந்தார். பிறகு கேஜ்ரிவாலுடன் சேர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x