Last Updated : 11 Nov, 2014 11:02 AM

 

Published : 11 Nov 2014 11:02 AM
Last Updated : 11 Nov 2014 11:02 AM

மின் தட்டுப்பாட்டை தீர்க்க கர்நாடகத்தில் சூரிய ஒளி மின் கொள்கை அறிமுகம்: ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள்

கர்நாடகத்தில் அதிகரித்துவரும் மின் பற்றாக்குறையை தீர்ப்ப தற்காக சூரிய ஒளி மின் கொள் கையை அம்மாநில அரசு வகுத்துள்ளது. சூரிய ஒளி மின்சார உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் உள்ளிட்ட மாற்றுவழி மின் உற்பத்தி திட்டங்களை கர்நாடக அரசு அறிமுகப்ப‌டுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் ஒருநாளைக்கு சராசரியாக 3 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது. கர்நாடகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையை தீர்க்க, அம்மாநில அரசு பல்வேறு மாற்று மின் உற்பத்தி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மரபுசாரா மின் உற்பத்திக்காக‌ கடந்த 10 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் புதிய‌ திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கர்நாடக மின்சாரத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், 'தி இந்து' விடம் கூறியதாவது: கர்நாடகத்தில் கடந்த 10 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடியில் சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தியின் மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அடுத்த 15 மாதங்களில் 1,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

நாட்டில் முதல் முறையாக கர்நாடகத்தில் சூரிய ஒளி மின் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கிராமப்புறங்களில் 50 ஏக்கர் அளவுள்ள விவசாய நிலத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

விவசாயம்,தோட்டக்கலை, சிறுபான்மையினர் நலம், சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் அனைத்துக் கட்டிடங்களுக்கும் சூரிய ஒளி மின் இணைப்பு வழங்கப்படும். கர்நாடக அரசின் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு ரூ. 3,200 கோடி மானியம் ஒதுக்கியுள்ளது.

தனியார் கட்டிடங்களில் மின் உற்பத்தி

இதே போல நகர்ப்புறங்களில் தனியார் கட்டிடங்களின் மேல் பகுதியில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 200 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த உற்பத்தியாள‌ர்களுக்கு மத்திய அரசு சார்பில் 30 சதவீத‌ம் மானியம் வழங்கப்படும். கர்நாடக அரசு இவர்களிடம் இருந்து 1 யூனிட் மின்சாரம் ரூ.7.20-க்கு கொள்முதல் செய்யும். இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் 2020-22 ஆண்டுகளில் கர்நாடகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி மூலமாக‌ 32 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும்.

மாற்று மின்சார‌ உற்பத்தி

அடுத்த 12 மாதங்களில் 13,200 மெகா வாட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் உயிரி எரிவாயு மூலம் 350 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

இது தவிர தற்போது இருக்கும் மின் நிலையங்களின் தரம் உயர்த்தவும்,மின் உற்பத்தியை அதிகரிக்கவும் ரூ 5,100 கோடியில் 244 கட்டுமானப் பணிகளை திட்டமிட்டுள்ளோம்.இந்த திட்டங்கள் மூலம் கர்நாடகா மின்மிகை மாநிலமாக திகழும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x