

‘‘நீதிமன்றங்களில் நிலுவையில் வழக்குகளைக் குறைக்கவும், நீதித் துறையின் சுமைகளைக் குறைக்க வும் மத்திய அரசு உதவும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பேசும்போது, ‘‘நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளால் சுமை அதிகமாக உள்ளது’’ என்று வருத்தத்துடன் கூறினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பேச்சில் இருந்த வலியை நான் உணர்கிறேன். நீதிமன்றங்களில் வழக்குகளைக் குறைக்க வேண்டும், நீதித்துறையின் சுமைகளைக் குறைக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உறுதியாக இருக்கிறார். அவருக்கு மத்திய அரசு ஆதரவாக இருந்து எல்லா உதவிகளையும் செய்யும். ஏற் கெனவே, நடைமுறைக்கு ஒத்து வராத 1200 பழைய சட்டங்களை மத்திய அரசு நீக்கி உள்ளது. மேலும், நீதிமன்றங்களை நவீன மயமாக்குவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.
நீதிமன்ற பணிகளை மிக எளிமையாக்க பல்வேறு தொழில் நுட்பங்களைத் தலைமை நீதிபதி பயன்படுத்தி வருவது பாராட்டத் தக்கது. மேலும், காலம், பணத்தை மிச்சப்படுத்த விசாரணையை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தும் முறையை அதிகரிக்க வேண்டும்.
வரும் 2022-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது. அதற்குள் இந்திய நாட்டை மிக உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் செல்ல நீதித்துறையும், மத்திய அரசும், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரபிரதேச ஆளுநர் ராம்நாயக், மேற்குவங்க ஆளுநர் கே.என்.திரிபாதி, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திலீப் பி.பொசால் மற்றும் நீதித் துறையைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.