நாயைக் காப்பாற்ற முதலையிடம் கையை இழந்த இளைஞர்
தனது வளர்ப்பு நாயை முதலையிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் கையை இழந்துள்ளார் பெங்களூரு இளைஞர் ஒருவர்.
26 வயதான முதித் தண்டாவாடே மும்பை ஐஐடியில் படித்தவர். பெங்களூருவில் சொந்தமாக தொழில் செய்துவருகிறார். அவரும் அவரது நண்பரும் பெங்களூருவிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தட்டேகெரே காடுகளுக்கு தனது இரண்டு நாய்களுடன் பயணம் செய்துள்ளார்.
காலை 7 மணியளவில் அங்கு சென்றடைந்த இவர்கள் காரை நிறுத்திவிட்டு நாய்களுடன் நடந்து சென்றுள்ளனர். நாய்கள் அங்கிருக்கும் ஏரியில் நனைய ஓடியுள்ளன. நாய்களை துரத்திச் சென்ற தண்டாவாடே ஏரியில் இருந்த முதலையை கவனிக்கவில்லை. அப்போது ஒரு முதலை தண்டவாடேவின் முழங்கையை கடித்து எறிந்தது.
அங்கு யானைகள் நடமாட்டத்தை ஆராய வந்த வனத்துறை பாதுகாவலர்களும், கண்காணிப்பாளர்களும் தண்டாவாடேவை காப்பாற்றி அருகிலிருக்கும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையின் தலைமை எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் தாமஸ் சாண்டி பேசுகையில், "இறந்து போன திசுக்கள் நீக்கப்பட்டுவிட்டன. இந்த சிகிச்சை திங்கள்கிழமை மீண்டும் நடைபெறும். தொற்றிலிருந்து நிவாரணம் பெற அடிபட்ட இடம் சில நாட்கள் திறந்தே இருக்கும். மூன்று மாதங்களுக்கு பிறகு செயற்கை முழங்கை பொருத்தப்படும் " என்றார்.
தடையை மீறிச் சென்றதால் வழக்கு
கையை இழந்த தண்டாவாடேவுக்கு சிக்கல் நீடிக்கும் வகையில், தடைசெய்யப்பட்ட பகுதியில் நுழைந்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாக துணை வனத்துறை பாதுகாவலர் ஜாவேத் மும்தாஜ் தெரிவித்துள்ளார்.
ஏரி யானைகள் நீர் அருந்துவதற்கான இடம். மனிதர்கள் நுழைய தடைசெய்யப்பட்ட பகுதியும் கூட. எனவே அத்துமீறி நுழைந்ததால் கர்நாடகா வனச் சட்டம் பிரிவு 24ன் கீழ் தண்டவாடே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
அந்த ஏரியில் கிட்டத்தட்ட 12 முதலைகள் இருக்கின்றன. அங்கு நுழையக்கூடாது என சுற்றி பல பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அது தடைசெய்யப்பட்ட பகுதியாக இருப்பினும் அங்கு நுழைய சுற்றுலா வருபவர்கள் முயற்சிப்பது அடிக்கடி நடக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
