

ரூ. 3,500 கோடி மின் கட்டண பாக்கி இருப்பதாகக் கூறி, தெலங்கானா மாநிலத்திற்கு வழங்கும் மின்சாரத்தை நிறுத்த ஆந்திர அரசு நேற்று உத்தரவிட்டது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங் கானா மாநிலம் தனியாக பிரிக்கப் பட்டதால், நிலக்கரி மூலம் உற்பத்தி யாகும் மின்சார விநியோகமும் பிரிக்கப்பட்டது. இதன்படி ஆந்திர மாநிலம் 46.11 சதவீதமும், தெலங்கானா 53.89 சதவீதமும் மின்சாரத்தை பிரித்துக் கொண்டன.
இந்நிலையில் தினமும் 1,200 மெகாவாட் மின்சாரத்தை ஆந்திரா தெலங்கானாவிற்கு வழங்குகிறது. இதேபோன்று தினமும் 800 மெகா வாட் மின்சாரத்தை தெலங்கானா ஆந்திராவிற்கு வழங்குகிறது. ஆந்திரா கூடுதலாக 400 மெகாவாட் மின்சாரத்தை தெலங்கானாவிற்கு வழங்கி வருவதால் இதன் பாக்கிக் கட்டணம் தற்போது ரூ.3,500 கோடியாக உள்ளது.
மே 31-ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தும்படி தெலங்கானா அரசுக்கு ஆந்திரா நோட்டீஸ் அனுப்பியது. இதுவரை இந்தக் கட்டணத்தை தெலங்கானா செலுத்தவில்லை. இதனால் 400 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்தும்படி நேற்று ஆந்திரா உத்தரவிட்டது. இதற்கான நோட்டீஸும் தெலங்கானா அரசுக்கு அனுப்பப்பட்டது.