

பாலியல் புகாரில் சிக்கியுள்ள தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார்.
தனது பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், உரிய நேரத்தில் உரிய நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தருண் தேஜ்பால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருண் தேஜ்பால் மீதான முன் ஜாமீன் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் நாளை (வெள்ளிக்கிழமை) உத்தரவுப் பிறப்பிக்க இருந்தது கவனத்துக்குரியது.
முன்னதாக, தெஹல்காவின் முன்னாள் நிர்வாக ஆசிரியரான தருண் தேஜ்பால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுனிதா குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், நீதிமன்ற உத்தரவின்படி கோவா போலீஸ் தனது பதில் மனுவை தாக்கல் செய்தது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இருதரப்பு வாதத்திற்கு பின், தீர ஆய்ந்து வெள்ளிக்கிழமை முடிவை அறிவிப்பதாக கூறிய நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில், தருண் தேஜ்பால் தனது முன் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.
கோவா போலீஸ் மறுப்பு...
இதனிடையே, தனக்குக் கீழே பணிபுரிந்த பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் அத்துமீறல் புரிந்ததாக எழுப்பப்பட்ட புகார் தொடர்பான விசாரணைக்காக, தருண் தேஜ்பால் கோவா காவல் துறை முன் இன்று ஆஜராக சனிக்கிழமை வரை அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அவகாசம் அளிக்க கோவா போலீஸ் மறுத்துவிட்டது.
இந்த நிலையில், தேஜ்பாலை ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் கைது உத்தரவைப் பெறுவதற்கு நீதிமன்றத்தை கோவா போலீஸ் நாடியுள்ளது. இதனால், அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம்.