Published : 22 Sep 2016 08:28 AM
Last Updated : 22 Sep 2016 08:28 AM

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற கர்நாடக அமைச்சரவையில் முடிவு

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற அம்மாநில அமைச்சரவை ரகசியமாக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக, கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று அமைச் சரவைக் கூட்டத்தை கூட்டினார். இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பங்கேற்ற பெரும்பாலான அமைச்சர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கக் கூடாது. ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடக்கூடாது என உறுதியாக தெரிவித்ததாக தெரிகிறது.

மேலும், அனைத்துக் கட்சி தலைவர்கள், எம்.பி.க்களை அழைத்துச்சென்று குடியரசுத் தலைவரிடம் முறையிடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அதன் மூலம் நீதிமன்ற தீர்ப்பை மறுக்கலாமா? அல்லது நீதிமன்ற அவமதிப்பில் சிக்கி, ராஜினாமா செய்யலாமா? எனவும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

24ல் சட்டப்பேரவை கூட்டம்

இறுதியாக, வரும் 24-ம் தேதி (சனிக்கிழமை ) காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது. இதில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்தால் நீதிமன்ற உத்தரவை மீறி, அரசியல் சாசன சிக்கலை ஏற்படுத்தலாம் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் முதல்வர் சித்தராமையாவும், அமைச்சர்களும் இந்த தகவலை மறுத்துள்ளனர். அதேநேரம், வரும் 24-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி காவிரி விவகார‌ம் தொடர்பாக விவாதிக்கப்படும். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x