

மகாராஷ்டிராவில் சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தில் எண்ணெய் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியின்போது, விஷவாயு தாக்கியதில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. திங்கள்கிழமை மாலை இந்நிறுவனத்தின் எண்ணெய் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. 25 அடி ஆழம் கொண்ட இந்தத் தொட்டியில் முதலில் 4 தொழிலாளர்கள் இறங்கினர்.
வெகுநேரமாகியும் அவர்கள் மேலே வராததால், மேலும் 5 தொழிலாளர்கள் தொட்டியில் இறங்கினர். பல மணி நேரமாகியும் அவர்களும் வராத காரணத்தினால் தீயணைப்புப் படையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்த வந்த தீயணைப்புப் படையினர் எண்ணெய் தொட்டியில் இறங்கி பார்த்தபோது, 9 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்நிறுவன உரிமையாளர் கீர்த்திகுமார் மற்றும் 3 உயரதிகாரிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சம்பாஜி பாட்டீல் நீலாங்கர் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தார்.
எனினும் மீட்புப் பணிகளை தாமதமாக முடுக்கிவிட்டதால், ஆவேசத்தில் இருந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரும், பொதுமக்களும் அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.