Published : 27 Aug 2016 09:13 AM
Last Updated : 27 Aug 2016 09:13 AM

ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த பெண்ணை தூக்கிச் செல்வதற்கு இடுப்பை உடைத்த ஊழியர்கள்: ஒடிசாவில் மற்றொரு வேதனை சம்பவம்

ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த பெண்ணின் உடலை தூக்கிச் செல்வதற்கு வசதியாக, அதன் இடுப்பை உடைத்து, மடித்து எடுத்துச் செல்லும் அதிர்ச்சிகர வீடியோ வெளி யாகியுள்ளது.

மருத்துவமனையில் வாகன வசதி மறுக்கப்பட்டதால் கிராமவாசி ஒருவர் தனது மனைவியிடன் சடலத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு, மகளுடன் 10 கி.மீ. தூரம் நடந்து சென்ற பரிதாப சம்பவம் ஒடிசாவில் கடந்த புதன்கிழமை நடந்தது. அதே மாநிலத்தில் மறுநாள் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசாவில் பாலாசோர் மாவட்டத்தை சேர்ந்த சாலாமணி பாரிக் (76) என்ற மூதாட்டி சோரோ ரயில்நிலையம் அருகில் கடந்த புதன்கிழமை ரயில் மோதி இறந்தார். சோரோ டவுனில் பிரேதப் பரிசோதனை செய்யும் வசதி இல்லாததால் அவரது உடல் அங்குள்ள சுகாதார மையத்தில் பல மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது. இதனை 30 கி.மீ. தொலைவில் உள்ள பாலாசோர் நகருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆட்டோவில் உடலை எடுத்துச் செல்ல அதிக செலவாகும் என்பதால் அதை ரயிலில் எடுத்துச் செல்ல ரயில்வே போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து உடலை ரயில் நிலையம் எடுத்து வருமாறு கடைநிலை ஊழியர்களிடம் (ஸ்வீப்பர்) கூறியுள்ளனர்.

இதையடுத்து சுகாதார மையம் சென்ற இரு ஊழியர்கள், மூதாட்டியின் உடல் மீது நின்று அதன் இடுப்பை உடைத்து, உடலை மடித்தனர். பிறகு அதை பிளாஸ்டிக் பையில் திணித்து, அதைப் பொட்டலமாக துணியில் சுற்றி, மூங்கில் கம்பில் மாட்டி ரயில் நிலையம் எடுத்துச் சென்றனர்.

இந்த அதிர்ச்சிகர சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸ் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் ஒடிசா மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x