

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே.சசிகலா தற்போது, சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வராக அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று ‘தி இந்து’விடம் இல.கணேசன் கூறும்போது, “சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பது குறித்து சட்ட நிபுணர்களின் ஆலோசனையை ஆளுநர் பெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இது சரி என்றே எனக்கு தோன்றுகிறது. ஆளுநர் தாமதப்படுத்துவதில் நியாயமான காரணம் இருப்பதும் பன்னீர்செல்வத்தின் நேற்றைய அறிக்கையில் தெரிந்து விட்டது.
சசிகலாவை பொதுச்செயலாள ராகவும், எம்எல்ஏக்களின் தலைவ ராகவும் தேர்ந்தெடுப்பது அதிமுக வின் உட்கட்சி விவகாரம். முதல்வர் பதவி என்று வரும்போது அவர் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். நான் அறிந்தவரை சசிகலா முதல்வர் ஆவதில் தமிழக மக்கள் திருப்தி அடையவில்லை. இந்தச் சூழலில் சசிகலா பதவியேற்பது சரியாக இருக்குமா? அவர் மீது வழக்குகள் உள்ளனவா? போன்ற வற்றை ஆராய்ந்த பின்னரே ஆளுநர் முடிவு எடுக்க வேண்டி இருக்கும்” என்றார்.
இந்த விவகாரத்தில் சுப்பிர மணியன் சுவாமி கூறும்போது, “நான் சசிகலா மீது வழக்கு தொடுத்து 20 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். இவரது பதவியேற்பு விவகாரத்தில் பாஜகவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சசிகலா கேட்டபடி அவரை உடனடியாக முதல்வர் பதவியில் அமர்த்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இதற்காக, ஒரு முறை ஆளுநரிடம் நேரிலும், மற்றொருமுறை சட்டப்பேரவை யிலும் அவர் தனது பெரும்பான் மையை நிரூபிக்க வேண்டியது அவசியம். மருத்துவமனையில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க தான் அனுமதிக்கப்பட வில்லை என்று இப்போது பன்னீர் கூற வெட்கப்பட வேண்டும். அனுமதி மறுப்பை அவர் ஏன் அப்போது ஏற்றுக்கொண்டார்? ஆளுநர் தன் விடுப்பை ரத்து செய்து உடனடியாக தமிழகம் செல்ல வேண்டும். அங்கு சசிகலா வுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும்” என்றார்.
நிர்மலா, ஜவடேகர் மறுப்பு
முன்னதாக, நாடாளுமன்றம் வந்த மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டபோது அவர், “இது தமிழக விவகாரம். இதில் நான் எதுவும் கூற முடியாது” என மறுத்துவிட்டார். அடுத்து வந்த பாஜகவின் தமிழக பொறுப்பாளரும், மனிதவள மேம்பாட்டு அமைச்சருமான ஜவடேகர், “தற்போது கருத்து சொல்ல எதுவும் இல்லை” என்றார். எனினும், அங்கு இந்தி பத்திரிகை யாளர்களிடம் பேசிக்கொண் டிருந்த இல.கணேசனை தனியாக அழைத்துச் சென்றார். அவரிடம் ஜவடேகர், தேசிய பத்திரிகையாள ரிடம் ஜாக்கிரதையாகப் பேசும்படி எச்சரித்தார்.