

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் குறித்து மாற்றுக் கருத்துகளைக் கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜிஎஸ்ட் அறிமுக நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
“தேவையற்ற, சீரழிவு தரும் அவசரத்தில் ஜிஎஸ்டியை அறிமுகம் செய்து மத்திய அரசு மிகப்பெரிய தவறிழைக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு ஜூன் 30ம் தேதி நள்ளிரவில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
“சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு வர்த்தகர்களுக்கும் போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். குறைந்தது 6 மாத கால அவகாசம் தேவை, அப்போதுதான் ஜிஎஸ்டி-யை அமல்படுத்த முடியும். இல்லையெனில் நம்முடைய பெரிய பொருளாதார நாட்டில் குழப்பங்களே ஏற்படும் அதற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்” என்று பானர்ஜி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது: தெளிவற்ற தனமையும் மோசமான நிர்வாகமும் சேர்ந்ததால் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பல இடங்களில் விலை உயர்ந்துள்ளன. சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயந்து போயிருக்கின்றன அல்லது குழப்பத்தில் உள்ளன” என்றார் மம்தா.
மேற்கு வங்க மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா கூறும்போது, “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நாங்கள் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறினோம் ஜிஎஸ்டி வரி அறிமுகம் படிப்படியாக, ஒழுங்குமுறையுடன் அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் இத்தகைய வரி முறையை நடைமுறைப்படுத்து முன்பு 12-18 மாதங்கள் வரை அவகாசம் அளித்தனர்.
இதற்கிடையே கொல்கத்தா ஜவுளி உற்பத்தியாளர்கள் ஜவுளித்துணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். சிறிய பொறியியல் பொருட்களை விற்கும் கடைகளும் கூட கொல்கத்தாவில் பூட்டி கிடக்கிறது.