

பிஹார் மாநிலத்தில் 97 வயதில் எம்ஏ படிக்கும் முதியவர்தான், நாட்டிலேயே மிக வயதான மாணவர் என்று லிம்கா சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் உள்ள நாளந்தா திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு எம்ஏ பொருளாதாரம் படிக்க ராஜ்குமார் வைஷ்யா பதிவு செய்தார். அவரைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். ராஜ்குமாரின் வயது 97. நாட்டிலேயே எம்ஏ படிக்கும் அதிக வயதுடைய மாணவர் ராஜ்குமார்தான் என்று ‘லிம்கா’ சாதனை புத்தகம் அவரை அங்கீகரித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘இரண்டு காரணங்களுக்காக நான் எம்ஏ படிக்க ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்தேன். ஒன்று, முதுநிலை பட்டம் பெற வேண்டும் என்ற தணியாத ஆர்வம். அடுத்து, வறுமை போன்ற பிரச்சினைகளை ஒழிப்பதில் இந்தியா ஏன் தோல்வி அடைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள பொருளாதாரப் பாடத்தை தேர்ந்தெடுத்தேன்’’ என்றார்.
ராஜ்குமார் கடந்த 1938-ம் ஆண்டு ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். அதன்பிறகு 1940-ம் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். குடும்பப் பொறுப்பு கள் அதிகரித்த காரணத்தால் அவரால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை. அதன்பிறகு கொடர்மாவில் உள்ள (தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது) தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணியாற்றி 1980ம்- ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். ராஜேந்திர நகர் காலனியில் கடந்த 10 ஆண்டுகளாக தனது 2-வது மகன் சந்தோஷ் குமாருடன் ராஜ்குமார் வசித்து வருகிறார். 97 வயதில் தனது ஆசை நிறைவேறப் போவதாக கூறும் ராஜ்குமார், கடந்த 1920-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.