Last Updated : 22 Sep, 2016 03:14 PM

 

Published : 22 Sep 2016 03:14 PM
Last Updated : 22 Sep 2016 03:14 PM

டெல்லி ஆசிரியை கொடூரக் கொலையின் பின்னணி என்ன?

டெல்லியில் 22 வயது ஆசிரியை கருணா கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தக் கொலைக்கான பின்னணி தெரியவந்துள்ளது.

கொலையாளி சுரேந்தர் சிங், தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததுதான் கொலைக்கான காரணம் என்று அவர் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சுரேந்தர் கருணாவைக் கத்தரிக்கோலால் 30 முறை குத்திக்கொல்வதற்கு முன்பாக 'தாக்கிவிடுவேன்' என்று எச்சரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அவர் பயப்படாததால் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் சுரேந்தர் கூறியுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

''சுரேந்தர் தன்னுடன் எப்பொழுதும் கத்தரிக்கோல்களை வைத்திருப்பேன் என்று கூறினார். அதே நேரம் எதற்காக வைத்திருக்கிறார் என்று விளக்கம் அளிக்கவில்லை'' என்று காவல்துறை துணை ஆணையர் மதூர் வர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய புலன்விசாரணை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கொலையாளி சுரேந்தர், ஆசிரியை கருணாவை மிரட்டுவதற்காக வன்முறையைக் கையாண்டிருக்கிறார். சம்பவம் நடப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பாக, சுரேந்தரும் கருணாவும் ஜிடிபி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தித்திருக்கின்றனர். அப்போது கருணா, தன்னுடைய தனிப்பட்ட படங்களை ஆண் நண்பருடன் பகிர்ந்துகொண்டிருக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது.

2012 முதல் 2015 வரை தாங்கள் நண்பர்களாக இருந்ததாக சுரேந்தர் தெரிவித்துள்ளார். கொலை நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் நிகழ்ந்த சந்திப்பில், சுரேந்தர் கருணாவின் செல்பேசியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருக்கிறார். கருணாவின் ஃபேஸ்புக் குறுஞ்செய்தி செயலிக்கான கடவுச்சொல்லைச் கூறச்சொல்லி மிரட்டியிருக்கிறார்.

தந்தை வீட்டுக்கு உடனே வரச்சொல்லியிருக்கிறார் என்று கருணா கூறியுள்ளார். இதற்கிடையில் வாட்ஸ் அப் செய்திகளையும், ஃபேஸ்புக் குறுஞ்செய்திகளையும் படித்திருக்கிறார் சுரேந்தர்.

அவற்றில், கருணா மற்றொரு இளைஞரிடம் பேசிக்கொண்டிருந்ததும் அவரோடு தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்'' என்று கூறுகிறார்.

இந்தத் தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், விசாரணையில் கருணாவும், சுரேந்தரும் மூன்று வருடங்கள் பழக்கத்தில் இருந்ததாகவும், சுரேந்தரின் வன்முறைத் தன்மையால் போன வருடத்தில் கருணா அவரைப் பிரிந்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர் சுரேந்தர், கருணாவைப் பின்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கொலையாளி சுரேந்தர் சிங், தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததால் தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளாது.

இது குறித்து கருணாவின் சகோதரர் அஸ்வின்குமார் 'தி இந்து'விடம் கூறும்போது, ''ரோகிணி பகுதியில் சுரேந்தர் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளி நடத்தி வந்தார். இவரிடம் வகுப்புக்கு சென்ற எனது சகோதரியை திருமணம் செய்துகொள்ளும்படி கடந்த ஒரு வருடமாக தொல்லை கொடுத்து வந்தார்.

இது தொடர்பாக 5 மாதங்களுக்கு முன் போலீஸில் புகார் செய்தோம். போலீஸார் நடவடிக்கை எடுக்காமல், இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பிவிட்டனர். இப்போது எனது சகோதரியை அவர் கொலையே செய்து விட்டார்'' என்று தெரிவித்தார்.

சுரேந்தருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அவரது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x