மகாராஷ்டிர அரசில் சிவசேனா பங்கேற்பு: பாஜக இன்று பேச்சு வார்த்தை

மகாராஷ்டிர அரசில் சிவசேனா பங்கேற்பு: பாஜக இன்று பேச்சு வார்த்தை
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநில அரசில் சிவசேனா கட்சி பங்கேற்பது குறித்து அக்கட்சித் தலைவர்களுடன் இன்று பேச்சு நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவரும், முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜக மூத்த தலைவர்கள் தேவேந்திர பிரதான், சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் சிவசேனா கட்சித் தலைவர்களுடன் நாளை (இன்று) பேச்சு நடத்தவுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசில் சிவசேனா கட்சி பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இதை பாஜக மட்டுமல்ல, சிவசேனா கட்சித் தொண்டர்களும், மகாராஷ்டிர மக்களும் விரும்புகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில்தான் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டோம். ஆனால், அதற்கு முன்பு கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தோம். தற்போதும் கூட, மத்திய அரசில் சிவசேனா கட்சி அங்கம் வகித்து வருகிறது.

சிவசேனா தலைவர்களுடன் பேச்சு நடத்த பிரதானுக்கும், பாட்டீலுக்கும் முழு அதி காரம் கொடுத்துள்ளோம். தேவைப் பட்டால், என்னிடமும் கட்சித் தலைமையிடமும் ஆலோசனை பெறுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

விரைவில் மகாராஷ்டிரா மாநில அரசில் சிவசேனா கட்சி இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்று 4 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை சிவசேனா கட்சியுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வெளிப்படையாக பேச்சு நடத்தப்படும் என்று பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா மீண்டும் கூட்டணியில் இணைவது தொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும் சமரச உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, சிவசேனா கட்சிக்கு மாநில அரசில் 4 கேபினட் அமைச்சர்கள் உள்பட 10 அமைச்சர்களுக்கான பதவியிடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் 121 எம்.எல்.ஏ.க் களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 63 எம்.எல்.ஏ.க்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக சிவசேனா உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in