தெலங்கானா: அமைச்சர்கள் குழு நவ.27-ல் இறுதி அறிக்கை

தெலங்கானா: அமைச்சர்கள் குழு நவ.27-ல் இறுதி அறிக்கை
Updated on
1 min read

தெலங்கானா தனி மாநிலம் தொடர்பாக நவம்பர் 27-ம் தேதி நடைபெறவுள்ள அமைச்சர்கள் குழு கூட்டத்தில் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அந்தக் கூட்டத்தில் தெலங்கானா மசோதா வரையறையை இக்குழு இறுதி செய்யும் எனக் கூறப்படுகிறது.

தெலங்கானா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செய்தியாளர்களிடம் ஷிண்டே கூறியதாவது: “தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கும் யோசனையை உறுதியாக முன்னெடுத்துச் செல்ல உள்ளோம். தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இது தொடர்பான மசோதாவை வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவுள்ளோம்” என்றார்.

இதற்கிடையே, புது டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.பி.க்கள் மாநாட்டில் உளவுத்துறை (ஐ.பி.) இயக்குநர் ஆசிப் இப்ராஹிம் பேசியதாவது: “ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கும் விவகாரத்தில் பாதுகாப்புப் படையினரும், உளவுத் துறையினரும் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in