

உணவகத்தில் க்ளீனர் வேலை, கட்டிடத் தொழில், டீ மாஸ்டர், சப்ளையர் என அடிப்படை விளிம்பு நிலை வேலைகளைப் பார்த்துக் கொண்டே 180 வகையான ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் சேகரித்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த லக்ஷ்மையா.
குறிப்பிட்ட சிலவகை நோட்டுகளையும், நாணயங்களையும் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ள லக்ஷ்மையா, இந்த சேகரிப்புக்காக சுமார் ரூ. 4 லட்சத்தை செலவிட்டுள்ளார்.
8 வயதில் தன்னுடைய சொந்த கிராமத்தில் இருந்து வெளியேறிய லக்ஷ்மையா, வேலைக்காக நகரம் புகுந்தவர். அங்கே நூர்கான் பஜாரில் உள்ள உணவகத்தில் க்ளீனராகச் சேர்ந்தார். நகரத்தில் உள்ள ஏராளமான உணவகங்களில் பணியாற்றியுள்ள லக்ஷ்மையா, பிஎஃப் கொடுக்க வேண்டும் என்பதற்காக எந்த நிறுவனமும் 3 மாதங்களுக்கு மேல் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்கிறார்.
கட்டிடத் தொழிலாளியாகவும் வேலை பார்த்த லக்ஷ்மையா, ஏராளமான புறக்கணிப்புகளுக்கு மத்தியில் எதையாவது வித்தியாசமாகச் செய்ய முடிவெடுத்தார். 1989-ல் இருந்து ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் சேகரிக்க ஆரம்பித்த அவர், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலான தொகையை அதற்கே செலவழித்தார்.
1999-ல் தன் சொந்த கிராமத்துக்கே திரும்பிய அவர், அங்கே டீ- மாஸ்டராகப் பணிபுரியத் தொடங்கினார். தன் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்தவர், தொடர்ந்து நாணய சேகரிப்பில் ஈடுபட்டார்.
திரை நடிகர்கள் குறித்த புத்தக சேகரிப்பு
அத்துடன் இன்னொரு ஆச்சரியத் தகவலையும் அவர் பகிர்ந்துகொள்கிறார். திரைப்பட நடிகர்கள் மற்றும் பாடகர்கள் குறித்த புத்தகங்களையும், பத்திரிகைகளையும் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் லக்ஷ்மையா. இதற்காக ரூ. 8 லட்சம் செலவழித்திருக்கிறார்.
60 வயதிற்குப் பிறகு, ஓய்வு பெற்றுள்ள லக்ஷ்மையா, தெலங்கானா அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகையைக் கொண்டு வாழ்கிறார். ஆனால் இன்னும் பணிபுரிய ஆர்வமாய் இருக்கும் அவர், அனைத்து நாடுகளின் ரூபாய் நோட்டுகளையும் சேகரிப்பதே எனது லட்சியம் என்கிறார்.