Published : 21 Feb 2014 12:29 PM
Last Updated : 21 Feb 2014 12:29 PM

எரிவாயு விலை விவகாரம்: மோடிக்கு கேஜ்ரிவால் கடிதம்

எரிவாயு விலை நிர்ணய விவகாரம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கக் கோரி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லியில் இயற்கை எரிவாயு விலை ஏற்றம் செய்யப்பட்டது, தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக மத்திய அரசு எடுத்த முடிவு என அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

மேலும் கேஜ்ரிவால் முதல்வராக இருந்த போது, இயற்கை எரிவாயு விலையை நிர்ணயம் செய்ததில் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

எரிவாயு விலை உயர்வினால், ஒரு வருடத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 54,000 கோடி ரூபாய் லாபமும், அதே அளவுக்கு அரசுக்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது என்பது கேஜ்ரிவாலின் வாதம்.

இவ்விவகாரத்தில், பாஜக மவுனம் காப்பதற்கு முகேஷ் அம்பானியுடன் மோடியின் நட்பு தான் காரணம் எனவும் கேஜ்ரிவால் கூறி வந்தார்.

இத்தகைய சூழலில், நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் கேஜ்ரிவால். அதில், இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மோடி விளக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "உங்கள் கட்சிக்கும், முகேஷ் அம்பானிக்கும் என்ன தொடர்பு? உங்கள் பிரச்சார பேரணிகளுக்கு நிதி உதவி செய்வது யார்? உங்களுக்கு உதவுவது முகேஷ் அம்பானி என கூறப்படுகிறதே. அது உண்மையா? நீங்களும், ராகுல் காந்தியும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்திவருகிறீர்களே, அவற்றிற்கு வாடகை கட்டணம் செலுத்துகிறீர்களா?" இவ்வாறு கேஜ்ரிவால் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் கடிதம் எழுத இருப்பதாகவும். இந்திய மொழிகளில் 10 கோடி கடிதங்கள் எழுதி அவற்றை மக்களுக்கு விநியோகிக்க இருப்பதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x