

'சஹாரா டைரி விவகாரம் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் மோடி தூய்மையானவராக இருந்தால் எதற்காக விசாரணைக்கு அஞ்ச வேண்டும்?’ என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2014-ல் டெல்லியில் சஹாரா இந்தியா குழுமத்துக்கு சொந்தமான பல இடங்களில் வரு மான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, ரகசிய டைரி ஒன்று கிடைத்ததாகவும், அதில் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் தரப்பட்ட விவரங்கள் இருப்பதாக வும் செய்திகள் வெளியாயின.
பிரதமர் மோடியின் பெயரும் அதில் இடம் பெற்றுள்ளதாகவும், குஜராத் முதல்வராக இருந்த போது, சஹாரா குழுமத்திடம் இருந்து அவர் பணம் பெற்ற தாகவும், ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் விவகாரங் களில் காங்கிரஸ் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், அதில் இருந்து அரசின் கவனத்தை திசை திருப்பவே காங்கிரஸ் இவ்விஷ யத்தை கையில் எடுத்திருப்பதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, டைரி ஆவ ணங்களைக் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரமாக கருத முடியாது என்பதால், தம் மீதான நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு, சஹாரா முன் வைத்த கோரிக் கையை வருமான வரித் தீர்வை ஆணையம் ஏற்றுக் கொண்டது.
இதன் மூலம், இவ்விஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முடக்கப்பட்டு, சஹாரா குழும நிறுவனத்துக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் வலை தளப் பக்கத்தில் குறிப்பிடும்போது, ‘வருமான வரித் தீர்வை ஆணையம் சஹாராவுக்கு நற்சான்று வழங்கியுள்ளதா, அல்லது மோடிஜிக்கு நற்சான்று வழங்கியுள்ளதா? மனச்சாட்சி தூய்மையாக இருந்தால் இவ்விஷ யத்தில் விசாரணைக்கு பிரதமர் மோடி எதற்காக அஞ்ச வேண்டும்? சஹாரா குழும நிறுவனத்தில் சிக்கிய டைரி குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.