

மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி காங்கிரஸுக்காக நாடு முழுவதும் பிரசாரம் செய்யமாட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “பிரியங்கா காந்தி காங்கிரஸுக்காக நாடுமுழுவதும் பிரசாரம் செய்வார் என்ற தகவல்கள் தவறானவை.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை கோயில் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் இறந்து விட்டனர். இப்பிரச்சினையைத் திசை திருப்பவே சிலர் திட்டமிட்டு பிரியங்கா தொடர்பாக தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். இதனை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.
கோயில் விழா நெரிசலில் மத்தியப் பிரதேச அரசின் தோல்வியைத் திசை திருப்ப இந்தத் தவறான தகவல் பரப்பட்டுள்ளது. ரே பரேலி மற்றும் அமேதி தொகுதியில் மட்டுமே பிரியங்கா பிரசாரம் செய்வார்” என்றார்.
இதனிடையே, பிரியங்கா நாடு முழுவதும் காங்கிரஸுக்காகப் பிரசாரம் செய்வாரா என மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் கேட்டபோது, “காங்கிரஸில் இருக்கும் ஒவ்வொருவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்” எனக் கூறினார்.