

தான் மகாத்மா காந்தியின் சிந்தனைகளை பின்பற்றி நடப்பவன் என்று தன்னைப் பற்றி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு கட்சியைத் தயார்படுத்திடும் வகையில் குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு வியாழக்கிழமை சென்ற அவர் அரை மணி நேரம் அங்கு பார்வையி்ட்டார்.
பின்னர் அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில் 'இந்த ஆசிரமத்துக்கு வருவதை எப்போதும் கௌரவமாக கருதுகிறேன். காந்தியின் சிந்தனைகளை பின்பற்றி நடப்பவன் நான். நன்றி' என்று கைப்பட எழுதினார்.
உப்பு சத்யாகிரகப் போராட்டம் எனப்படும் தண்டி யாத்திரையை தொடங்கும் வரை, இந்த ஆசிரமத்திலிருந்துதான், தனது அகிம்சை வழிப்போராட்டத்தை வழிநடத்தினார் மகாத்மா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 2 நாள் சுற்றுப்பயணத்தில் ஆமதாபாத், ராஜ்கோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துவார். குஜராத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிவரும் பாஜக தலைவர் நரேந்திர மோடியை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வீழ்த்தி ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றுவதற்கான உத்திகள் பற்றி கட்சித் தலைவர்களுடன் அவர் விவாதிப்பார்.