Last Updated : 04 Aug, 2016 08:40 PM

 

Published : 04 Aug 2016 08:40 PM
Last Updated : 04 Aug 2016 08:40 PM

கெயில் எரிவாயு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகளை பாதிக்கும் கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கனிமொழி வலியுறுத்தினார். இது குறித்து அவர் இன்று மாநிலங்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இது குறித்து திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழி பேசியதாவது:

''தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவற்றை தேசிய எரிவாயு வழித்தடத்தில் இணைப்பதற்காக கொச்சி-குட்டநாடு-மங்களூர்-பெங்களூர் எரிவாயு குழாய் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது, 2007-ல் ஆரம்பிக்கப்பட்டாலும் இந்த திட்டம் 2012-ல் நடைமுறைக்கு வந்தது. மூன்று மாநிலங்களில் 871 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறது. தமிழ்நாட்டில் ஏழுமாவட்டங்களில் 310 கிலோ மீட்டர்கள் இந்த திட்ட எல்லைக்குள் வருகின்றன. இந்த எரிவாயு குழாய் பதிப்புத் திட்டத்தால் தமிழ்நாட்டில் 146 கிராமங்களில், 2,430 விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க, எரிவாயுக்குழாய்களை நெடுஞ்சாலைகள் வழியாக கொண்டு செல்லுமாறு விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். நெடுஞ்சாலைகள் வழியாக குழாய்கள் பதிக்கப்படுவது புதிதல்ல. விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இதுவே தீர்வு ஆகும்.மத்திய அரசும், இந்த திட்டடத்தை செயல்படுத்தும் கெயில் நிறுவனமும் நெடுஞ்சாலைகள் வழியாக குழாய்களைக் கொண்டு செல்வதால் திட்டத்தின் செலவு அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

கெயில் நிறுவனத்துக்கு எதிராக தமிழகத்தில் இருந்து விவசாய சங்கத்தினர் தொடுத்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளோடுகலந்து ஆலோசனை செய்து இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் ஒரே நம்பிக்கை.

ஆனால், மத்திய அரசு விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய திசையில் செல்வதற்கான எந்த ஓர் அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. மத்திய அரசு தமிழக விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்ற உறுதியைத் தரவேண்டும். தமிழகத்தில் விவசாயிகள் உட்பட பல தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு அதன் பிறகே இந்த திட்டத்தை செயல்படுத்த முனையவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்'' என்று கனிமொழி தெரிவித்தார்.





.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x