

கோஹினூர் வைரத்தை பிரிட்டனிடமிருந்து மீட்பது தொடர்பாகவோ அல்லது அதை பிரிட்டன் அரசாங்கம் ஏலம் விடுவதை தடுப்பது தொடர்பாகவோ எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோஹினூர் வைரத்தை மீட்டுக் கொண்டுவர உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆல் இந்தியா ஹியூமன் ரைட்ஸ் அண்ட் சோஷியல் ஜஸ்டிஸ் பிரன்ட் என்ற அமைப்பு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் தலைமையிலான அமர்வு, "வெளிநாட்டு அரசாங்கத்துக்கு நாம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இத்தகைய மனுக்கள் அவசியமற்றது" என்றனர்.
மேலும் இவ்விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இந்திய அரசு பிரிட்டன் அரசுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. எனவே இந்த மனு அவசியமற்றது எனக் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.