Published : 27 Mar 2014 01:21 PM
Last Updated : 27 Mar 2014 01:21 PM

பிசிசிஐ தலைவராக காவஸ்கரை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை: சென்னை, ராஜஸ்தான் அணிகளை ஐபிஎல் போட்டியில் இருந்து நீக்கவும் யோசனை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் என்.சீனிவாசனை நீக்கிவிட்டு சுனில் காவஸ்கரை அப்பதவியில் தற்காலிகமாக நியமிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை தற்காலிகமாக நீக்கவும் உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் புகார்களில் அந்த இரு அணிகளும் சிக்கியுள்ளன. இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இண்டியா சிமெண்ட்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. இந்நிறுவனம் பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசனுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆராய்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான அமர்வு இது தொடர்பாக மேலும் கூறியுள்ளது: ஐபிஎல் முறைகேடுகள் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் முடிக்கும் வரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் காவஸ்கரை பிசிசிஐ-யின் இடைக்கால தலைவராக நியமிக்கலாம். இது தொடர்பாக பிசிசிஐ தனது பதிலை நாளை (இன்று) தெரிவிக்க வேண்டும். அதன்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

இந்த வழக்கில் பிகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே, இண்டியா சிமெண்ட்ஸ் அதிகாரிகள் பலரும் பிசிசிஐ செயல்பாடுகளில் தலையிடுகிறார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து அந்நிறுவன அதிகாரிகள் பிசிசிஐ செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியில் இருக்கிறார். அவருக்கும் முறைகேடுகளில் தொடர்பு உண்டு. குருநாத் மெய்யப்பன் குறித்து முக்தல் குழு விசாரித்தபோது பல தவறான தகவல்களை தோனி கூறியுள்ளார் என்றும் சால்வே குற்றம்சாட்டினார்.

அதே நேரத்தில் ஐபிஎல்-லில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணியை நீக்க வேண்டுமென்ற சால்வேயின் வாதத்தை எதிர்த்து வாதாடிய பிசிசிஐ தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், ஐபிஎல் போட்டியில் அந்த இரு அணிகளையும் விளையாட அனுமதிக்காவிட்டால் ஒட்டுமொத்த போட்டி அமைப்பே சீர்குலைந்துவிடும் என்று வாதிட்டார்.

பிசிசிஐ தலைவர் பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்பேன் காவஸ்கர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்பேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுநீல் காவஸ்கர் கூறியுள்ளார்.

பிசிசிஐ தலைவர் பதவிக்கு காவஸ்கரை உச்ச நீதிமன்றம் நேற்று பரிந்துரைத்துள்ள நிலையில் இது தொடர்பாக அவர் கூறியுள்ளது:

நான் இப்போது கிரிக்கெட் வர்ணணையாளராக பிசிசிஐ-யில் இருக்கிறேன். ஆனால் உச்ச நீதிமன்றம் புதிய பொறுப்பை ஏற்கச் சொன்னால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்பேன். அதனை எனக்குக் கிடைத்த கவுரவமாகவே கருதுகிறேன். உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்காக காத்திருக்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x