ஆதார் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஆதார் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

பல்வேறு சமூக நலத்திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெற ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, அரசின் சமூக நலத்திட்டங்கள் மூலம் பயனடைய ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆதார் எண்ணை இணைப்பதன்மூலம், நலத் திட்ட உதவிகள் சரியான நபர்களுக்குச் சென்றடைகிறதா என்பதை அரசு கண்காணிக்க முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட 3 வழக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கார், நவீன் சின்ஹா அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த 9-ம் தேதி ஆதார் - பான் எண் இணைப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டியதோடு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்குத் இடைக்கால தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தது.

நீதிபதிகள் மேலும் கூறும்போது, "இன்னும் ஒருவாரம் மனுதாரர்கள் காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அரசின் இந்த உத்தரவால் எவரேனும் பாதிக்கப்பட்டால் அதையும் இந்த நீதிமன்றத்த்திலேயே முறையிடலாம்" எனக் கூறினர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சமூக நலத்திட்டங்களின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என வாதிட்டார்.

இதனையடுத்து, நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in