

ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு சுரங்க ஒதுக்கீடு மேற்கொண்டதில் பிரதமர் தவறேதும் செய்யவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முதல்முறையாக இப்போதுதான் பிரதமர் அலுவலகம் கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள தலாபிரா நிலக்கரிச் சுரங்க ஒதுக் கீட்டில் முறைகேடு நடந்ததாக தொழி லதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செய லாளர் பி.சி.பரேக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலை யில், சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்து கையெழுத் திட்டுள்ளார். எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பி.சி.பரேக் கூறியிருந்தார்.
இந்நிலையில், சுரங்க ஒதுக்கீட்டில் தவறேதும் நடைபெறவில்லை என விளக்கமளித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளதாவது: 2005-ம் ஆண்டு நிலக்கரித் துறை அமைச்சகம் எடுத்த முடிவின் அடிப்படையில், கே.எம்.பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனத் துக்கு சுரங்க ஒதுக்கீட்டை பெறத் தகுதியிருப்பதை அறிந்த பின்பே அதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை மேற்கொள்வதிலும், கூடுதல் தகவல்களைத் திரட்டுவதி லும் சிபிஐக்கு பிரதமர் அலுவலகம் எந்தவிதமான இடையூறும் செய்ய வில்லை. சட்டப்படி விசாரணை நடைபெறும்.
பிரதமருக்கு பிர்லா கடிதம்
2005-ம் ஆண்டு மே 7-ம் தேதி குமார் மங்கலம் பிர்லாவிடமிருந்து ஒடிசாவில் உள்ள தலாபிரா 2 மற்றும் 3-வது சுரங்கங்களை தனது ஹிண்டால்கோ நிறுவனத்தின் மின் உற்பத்தித் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யும்படி கடிதம் வந்தது. இது தொடர்பாக நிலக்கரித்துறை அமைச்சகத்தின் கருத்தை அறிய வும் என பிரதமர் அதில் குறிப்பு எழுதி, மே 25-ம் தேதி அத்துறைக்கு அனுப்பிவைத்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் தலாபிரா 2-வது சுரங்க ஒதுக்கீடு குறித்து நிலக்கரித்துறை அமைச்சகம், பிரதமருக்கு அனுப்பிய கோப்பில், 'மூன்று நிறுவனங்கள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. அதில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு (என்.எல்.சி.) சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ய தேர்வுக் குழு முடிவு செய்திருக்கிறது எனத் தெரி விக்கப்பட்டது. '
அப்போது, ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு சுரங்கத்தை ஒதுக்கீடு செய்யாததற்கு மகாநதி நிலக்கரி நிறுவனத்திடமிருந்து (எம்.சி.எல்.) தேவையான நிலக்கரியைப் பெற ஹிண்டால்கோவிற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்ததும், என்.எல்.சியும், எம்.சி.எல்.லும் இணைந்து தலாபிரா 2 மற்றும் 3-வது சுரங்கத்தை ஒன்றிணைத்து மிகப்பெரிய சுரங்கமாக நிர்வகிக்கும் எனக் கருதியதே காரணம்.
ஆனால், இது தொடர்பாக கடிதம் எழுதிய கே.எம்.பிர்லா, 'தலாபிரா சுரங்கத்தைக் கேட்டு 1996-ம் ஆண்டே ஹிண்டால்கோ முதல் விண்ணப்பத்தை அளித்தது. நிலக்கரித் தட்டுப்பாட்டால், எங்க ளுக்குத் தேவையான நிலக்கரியை எம்.சி.எல்.லால் வழங்க இயல வில்லை' என்று தெரிவித்திருந்தார்.
ஒடிசா முதல்வரின் கடிதம்
இதற்கிடையே 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி ஒடிசா முதல்வரும் தலாபிரா 2-வது சுரங்கத்தை ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் எனக் கூறி, பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். பின்னர், செப்டம்பர் 16-ம் தேதி தலாபிரா 2 மற்றும் 3-வது சுரங்கத்தை ஒருங்கிணைத்து எம்.சி.எல்., என்.எல்.சி., ஹிண்டால்கோ ஆகியவை கூட்டாக நிர்வகிக்க அனுமதிப்பது. முறையே 70:15:15 சதவீத பங்குகள் அடிப்படையில் பகிர்ந்து அளிப்பது என நிலக்கரித்துறை அமைச்சகம் யோசனை தெரிவித்தது.
இதில், என்.எல்.சி., ஹிண்டால்கோவுக்கான 15:15 சதவீதத்தை, 22.5:7.5 சதவீக மாக மாற்ற பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியது. அதன் பின், 2005, அக்டோபர் 10-ம் தேதி சுரங்க ஒதுக்கீட்டுக்கு முறைப்படி பிரதமர் ஒப்புதல் அளித்தார். எனவே, இந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடை பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.