

இந்தியாவின் அனைத்து மகளிர் வங்கியின் (பாரதிய மகிளா வங்கி) முதல் கிளையைத் துவக்கிவைத்த பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் பாகுபாட்டுக்கு உள்ளாகும் பெண்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது என்றார்.
அனைத்து மகளிர் வங்கியின் முதல் கிளை இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்த நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பையில் திறக்கப்பட்டது.
இந்த விழாவில் முதல் வங்கியைத் துவக்கிவைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "நாம் பெண் குடியரசுத் தலைவரைப் பெற்றிருந்தோம். இப்போது, பெண் மக்களவைத் தலைவர், பெண் எதிர்கட்சித் தலைவர், இரண்டு பெண் முதல்வர்களைக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவின் மிகப் பெரியதும், பழமைவாய்ந்ததுமான கட்சி, பெண் தலைவரைக் கொண்டிருப்பதும் பெருமிதத்துக்குரிய விஷயம். சமீபத்தில் உலக அளவில் தொழில்துறையில் சிறந்து விளங்கும் முதல் 50 பெண்களில், இந்தியப் பெண்கள் நால்வர் இடம்பெற்றிருந்தனர்.
அதேவேளையில், இவையெல்லாம் நம் நாட்டின் சராசரி வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை. இந்தியப் பெண்கள் வீட்டிலும், கல்வி நிலையங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், பொதுவெளியிலும் பாகுபாட்டைச் சந்திப்பது மிகவும் கவலைக்குரிய நிலைமை.
பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் அதிகாரமளிக்கப்படுவது என்பது இன்னும் தொலைதூர இலக்காகவே இருக்கிறது.
ஒரு புதிய தனித்துவ நிறுவனத்தின் தொடக்கத்துக்காக நாம் இப்போது கூடியிருக்கிறோம். மிகக் குறைந்த காலகட்டத்தில், இத்தகையை வங்கியை நடைமுறைப்படுத்திய நண்பரும், நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது குழுவைப் பாராட்டுகிறேன்" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத் பவார், ஃபரூக் அப்துல்லா மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மார்ச் 31-க்குள் 25 கிளைகள்
அனைத்து மகளிர் வங்கியின் கிளை, சென்னை, கொல்கத்தா, குவஹாத்தி, ஆமதாபாத் உள்ளிட்ட ஏழு இடங்களிலும் இந்த வங்கியின் கிளை செயல்படத் தொடங்கியது.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் 25 கிளைகளாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
அனைத்து மகளிர் வங்கி திறப்பதற்காக கடந்த பட்ஜெட்டில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மகிளா வங்கி அமைப்பதற்கு கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி கொள்கை ஒப்புதல் அளித்தது. முன்னதாக, உஷா அனந்த சுப்ரமணியனை வங்கியின் நிர்வாக இயக்குனராக கடந்த வாரம் மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.