

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்ட வழக்கில் மார்ச் 31-ம் தேதி நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகும் வகையில் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜாமினீல் வெளியே வரக்கூடிய இந்த வாரண்ட் உத்தரவை நீதிபதி கர்ணனிடம் அளிக்குமாறு மேற்குவங்க போலீஸ் டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே பதவியிலிருக்கும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வாரண்ட் பிறப்பித்திருப்பது இதுவே முதல்முறை.
வழக்கின் பின்னணி:
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய நீதிபதி சி.எஸ். கர்ணன்.
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகள், நீதித்துறை ஆகியவை பற்றி கடும் விமர்சனக் கருத்துகளை கர்ணன் கூறிவருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவர் மீது உச்ச நீதிமன்றம் தானே கவனமேற்கொண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடைசியாக கடந்த பிப்ரவரி 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை மார்ச் மாதம் 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கர்ணனுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பேக்ஸை ஏற்க மறுத்த நீதிபதிகள்:
நீதிபதி கர்ணன் தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் மற்றும் பிற நீதிபதிகளைச் சந்திக்க வேண்டும் என்று ஃபேக்ஸ் மூலம் உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு செய்தி அனுப்பியதை நீதிபதி கேஹர் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியிடம் தெரிவித்தார்.
ஆனால் நீதிபதி கர்ணனுக்கு அனுப்பப்பட்ட அவமதிப்பு தொடர்பான நோட்டீஸுக்கு இந்த ஃபேக்ஸ் மெசேஜை பதிலாக எடுத்துக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது வாரண்ட் உத்தரவில் தெரிவித்துள்ளது.
ஒரு மாதமாக இழுத்தடிப்பு..
"சுமார் ஒருமாதம் கால அவகாசம் அளித்தும் நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதன் அவசியமிருப்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை, அவர் வழக்கறிஞர் மூலம் கூட தன் தரப்பு வாதத்தை வைத்திருக்கலாம் ஆனால் இரண்டையுமே செய்யவில்லை" என்று உச்ச நீதிமன்ற அமர்வு தனது வாரண்டில் தெரிவித்துள்ளது.
தற்கொலை குறிப்பும் சர்ச்சைகளும்..
தற்கொலை செய்துகொண்ட முன்னாள் அருணாச்சலப் பிரதேச முதல்வர் கலிக்கோ புல் தனது மரணக் குறிப்பில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை 2016-ல் குறிப்பிட்டிருந்தார், அது குறித்து விசாரணை தேவை என்று கோரி வழக்கறிஞர் ஒருவர் செய்திருந்த மனுவை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கரணன் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாக எழுந்துள்ள செய்திகளை அட்டர்னி ஜெனர்ல் ரோஹத்கி, உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனது பதவியைப் பறிக்கும் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முடிவு செல்லாது என்ற மனுதாரர் - வழக்கறிஞரின் வாதத்துடன் நீதிபதி கர்ணன் ஒத்துப் போவதாக அட்டர்னி ஜெனர்ல் ரோத்கி தெரிவித்தார். ஆனால் இதனை தலைமை நீதிபதி கேஹர் ஏற்கவில்லை.
இந்நிலையில் மார்ச் 31-ம் தேதி நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற அமர்வின் முன் ஆஜராவதை உறுதி செய்யும் வாரண்ட் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.