

மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது மாற்று அவைத் தலைவராக திமுக உறுப்பினர் திருச்சி சிவா செயல்பட்டார். அப்போது 20 நிமிடங்களைக் கடந்து அதிமுக உறுப்பினர் (மாநிலங்களவை அதிமுக தலைவர்) பேசும்போது, குறுக்கிட்ட திருச்சி சிவா, உரையை விரைந்து முடிக்குமாறு கூறியுள்ளார்.
இதற்கு மாற்று அவைத் தலைவரை (திருச்சி சிவாவை) அதிமுக உறுப்பினர் மரியாதைக் குறைவாக பேசியதாக, டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று குற்றம் சாட்டினார். அதிமுக உறுப்பினரின் பெயரைக் குறிப்பிடாத இளங்கோவன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்கு அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், “அவைக் குறிப்புகள் மற்றும் வீடியோவை பார்த்த பின், எனது முடிவை சொல்கிறேன்” என்றார்.