Published : 05 Oct 2014 06:46 PM
Last Updated : 05 Oct 2014 06:46 PM

பால் தாக்கரேவுக்காக சிவசேனாவை விமர்சிக்க மாட்டேன்: மோடி பேச்சு

பால் தாக்கரேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சிவசேனாவை விமர்சிக்க மாட்டேன் என்று மகாராஷ்டிரத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பாஜக - சிவசேனா இடையிலான கூட்டணி முறிந்த நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கின்றன. இம்மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

சாங்லி மாவட்டத்தின் டாஸ்கான் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரச்சாரம் செய்தபோது பேசும்போது, "இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா கட்சியை விமர்சித்து நான் எதுவும் பேசாமல் இருப்பது குறித்து அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே காலமான பின்பு மகாராஷ்டிரத்தில் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சிவசேனாவை விமர்சித்து ஒரு வார்த்தைக் கூட பேசக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். இது, அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகவே கருதுகிறேன்.

மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து ஊழலை முற்றிலுமாக ஒழிக்க, பெரும்பான்மை பலத்துடன் பாஜக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். ஊழல் விஷயத்தில் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் ஒரே மாதிரிதான் உள்ளன. மகாராஷ்டிரத்தை அவர்கள் அழிவுப் பாதையில் கொண்டு சென்றுவிட்டனர்" என்றார் மோடி.

இந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடுமையாக சாடிய மோடி, "காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய வேளாண் துறை அமைச்சராக சரத் பவார் பொறுப்பு வகித்த காலகட்டத்தில்தான் இங்கு மகாராஷ்டிரத்தில் ஆண்டுக்கு 3,700 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்" என்றார் அவர்.

மைதானத்தை சுத்தம் செய்த சிவசேனா தொண்டர்கள்

சிவசேனா கட்சியின் முக்கிய பிரமுகரான அருண் தூத்வாத்கர் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, மோடி கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறும் மைதானத்தை கவனித்திருக்கிறார். அந்த மைதானம் முழுவதும் குப்பைகள் நிறைந்திருப்பதைப் பார்த்த அவர், தனது கட்சியின் தொண்டர்களை அழைத்து சுத்தப்படுத்துமாறு கூறினார்.

துடைப்பம், வாளி சகிதமாக அங்கு வந்த சிவசேனா தொண்டர்கள், மைதானத்தில் இருந்த காலி பாட்டில்கள், கொடிகள், பேனர்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினர். பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்று தனியாக தேர்தல் களத்தைச் சந்திக்கும் சிவசேனா கட்சியின் தொண்டர்கள், தூய்மையான இந்தியா திட்டத்தை மோடி கூட்டம் நடத்திய மைதானத்தில் செயல்படுத்தியது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x